தமிழ் பிராமணர்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

தமிழ் பிராமணர்கள் தமிழக இந்துக்களில் ஒரு சிறு பிரிவினர். வரலாற்றுத் தரவுகளின்படி அவர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே தென்கிழக்காசியாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள், அர்ச்சகர்கள், ஆலோசகர்கள், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் எனப் பணியாற்றியிருக்கிறார்கள். சிங்கப்பூருக்கு வந்த முதல் தமிழ் பிராமணர் சுந்தரம் ஐயர் என்றும் இவர் 1890-களில் மீன்பிடிப் படகு ஒன்றில் வந்ததாகவும் துறைமுக வாரியத்தில் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. காலனித்துவச் சிங்கப்பூருக்கு 1900-களின் தொடக்கக் காலத்திலிருந்து அவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வரத் தொடங்கினர். கடலைத் தாண்டக்கூடாது என்ற பாரம்பரிய இந்திய பிராமண விதிமுறைகளை மீறி, தொடக்கக்காலப் பிராமணர்கள் பொருளீட்டுவதற்காக இத்தீவுக்கு வந்தனர். பலர், எழுத்தர்கள், கணக்காளர்கள் முதலிய அலுவலகம் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர். 

முதலில் வந்த தமிழ் பிராமணர்கள், பெரும்பாலும் சிராங்கூன் ரோட்டைச் சுற்றியிருந்த, தமிழ்ச் சமூகங்கள் மிகுந்திருந்த பகுதிகளில் ஒருவருக்கொருவர் ஆதரவாகச் சிறுசிறு குழுக்களாக வசித்தனர். மற்றும் சிலர் தங்கள் வேலையிடங்களுக்கு அருகே, துறைமுகத்தை ஒட்டியிருந்த தஞ்சோங் பகாரிலும் நேவல் பேஸ் எனப்பட்ட கப்பற்படைத் தளத்தை ஒட்டியிருந்த செம்பாவாங்கிலும் வசித்தனர். அவர்கள் 1960-கள் முதல், தங்களின் பலதரப்பட்ட தொழில்கள், வருமான நிலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் தீவெங்கும் பரவலாக வசிக்கத் தொடங்கினர். தற்போது தமிழ் பிராமணர்கள், பொது வீடமைப்புப் பேட்டைகள், கூட்டுரிமை வீடுகள், தனி பங்களாக்கள் முதலியவற்றில் வசிக்கின்றனர்.


தொடக்கக்காலத் தமிழ் பிராமணர்கள் எழுத்தர்களாகவும் கணக்காளர்களாகவும் பணியாற்றினாலும் 1940-களின் பிற்பகுதியில் வந்த குடியேறிகள் நிர்வாகப் பதவிகளில் அமர்ந்தனர். சிலர், சுகாதாரப் பராமரிப்புத் துறையில் நிர்வாகிகளாகப் பணியாற்றினர். பலர் மருத்துவர்களாகவும் பொறியியலாளர்களாகவும் வங்கியாளர்களாகவும் இருந்தனர். சிங்கப்பூர்ப் பட்டயக் கணக்கர்கள் கழகம் இந்தியப் பட்டயச் சான்றுகளை அங்கீகரித்தபின் 1970-களிலும் 1980-களிலும் பட்டயக் கணக்கர்கள் பலர் சிங்கப்பூருக்கு வரத் தொடங்கினர். தகவல் தொழில்நுட்பத் துறையில் விரைவாகப் பெருகிவந்த தேவைக்கு ஈடுகொடுக்க 1990-களின் தொடக்கம் முதல் அத்துறை சார்ந்த தொழிலர்களும் வரத் தொடங்கினர்.

ஆழ்ந்த சமயப் பற்றுள்ள பிராமணச் சமூகம், தொடக்கக்காலத்தில் தாங்கள் வழிபட்ட தெய்வங்களின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. அவர்களுள் பெரும்பாலோருக்கு வழிபாடு ஒரு முக்கியமான அன்றாடச் சடங்காக இருந்தது. சமயப் பழக்க வழக்கங்கள், உணவுப் பழக்கங்கள், உடை ஆகியவை குழுவுக்குக் குழு வேறுபட்டிருந்தன. எனினும், எல்லா பிராமண ஆண் பிள்ளைகளும், பொதுவாக ஏழு வயதில், உபநயன தீட்சை பெற்று பூணூல் அணியத் தொடங்குகின்றனர். அது அவர்கள் குரு ஒருவரிடமிருந்து சமயக் கல்வி பெறத் தயாராக இருப்பதைக் குறிக்கிறது. தமிழ் பிராமணர்கள் பொதுவாக சிவனையும் அவர் சார்ந்த தெய்வங்களையும் வழிபடும் சைவர்களாகவும் விஷ்ணுவையும் அவர் சார்ந்த தெய்வங்களையும் வழிபடும் வைணவர்களாகவும் இருப்பார்கள். ஆரம்பகாலத்தில், அவர்கள் அதிகம் வழிபட்ட கோவில்கள் கென்பரா ரோட்டிலிருந்து பின்னர் யீஷுன் தொழிற்பேட்டைக்கு இடம் பெயர்ந்த புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம், ஆர்ச்சர்ட் ரோட்டிலிருந்து பின்னர் கிழக்கு கேலாங் பகுதிக்கு மாறிய ஶ்ரீ சிவன் கோவில் ஆகியவையாகும். பின்னாளில், பிற கோவில்களிலும், குறிப்பாக சிராங்கூன் ரோட்டிலிருக்கும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், தேங் ரோட்டிலிருக்கும் அருள்மிகு தெண்டாயுதபாணி கோவில், சவுத் பிரிட்ஜ் ரோட்டிலிருக்கும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆகியவற்றிலும் வழிபாடு செய்தார்கள்.

சிங்கப்பூரில் தங்கள் சமயப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றச் சிரமப்பட்ட பிராமணர்கள் பலர் தாய்நாடு திரும்பினர். இங்கேயே தங்கிவிட்டவர்கள் தங்கள் சமய, பண்பாட்டுத் தேவைகளுக்காக சபா ஒன்றை அமைத்துக்கொண்டனர். இந்த சபாவை நிறுவும் யோசனை 1923-இல், 20 பேர் சக பிராமணர் ஒருவரின் வீட்டில் சந்தித்தபோது பிறந்தது. அடுத்த ஆண்டிலேயே சிங்கப்பூர் தக்ஷிண பாரத பிராமண சபா உருவாக்கப்பட்டது. இந்தச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஒருவரின் கூற்றுப்படி, பிராமண சபா, “இப்பிரிவினரின் தனித்தன்மை, அடையாளம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பேணிக் காப்பதற்காக” நிறுவப்பட்டது.

தொடக்க ஆண்டுகளில் உறுப்பினர்களின் இல்லங்களில் நடத்தப்பட்ட சடங்குகள், விழாக்கள், வழிபாடுகள் முதலியவை காலப்போக்கில் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருகியபோது, வாடகை மனைகளுக்கு மாறின. பிராமண சபாவில் 2024 வாக்கில் 1,200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். சங்கம், 2011-இல், 108A ஓவன் ரோட்டில் நிரந்தர இல்லம் ஒன்றைக் கண்டடைந்தது. சங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் வேதங்கள் பிற சமய நூல்கள் ஆகியவை பற்றிய வகுப்புகளை நடத்துவது அடங்கும். சங்கத்தின் உறுப்பினர்கள், சிங்கப்பூர் இந்து சமூகத்தின் பல்வேறு சமயத் தேவைகளுக்கும் உதவுகின்றனர். அவர்கள் பல இந்துக் கோயில்களில், அர்ச்சகர்கள், தொண்டூழிய நிர்வாகிகள், செயலவை உறுப்பினர்கள் எனப் பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். பிராமண சபா பல பொதுத் தொண்டுகளிலும் ஈடுபடுகிறது. குஜராத் நிலநடுக்கம் (2001), ஆழிப்பேரலை (2004) முதலிய பேரிடர்களின்போது செய்ததுபோல் நிவாரண நிதி திரட்ட உதவுகிறது. ரத்த தான நடவடிக்கைகளில் பங்கேற்கிறது. கடந்த 2024-இல், சபாவின் 100-ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

தமிழ் பிராமணர்கள் கலைகளிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர். சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் தோற்றத்தில் பெரும் பங்காற்றிய அவர்கள் இன்றளவும் அதன் செயற்பாடுகளில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். மேலும், இந்தச் சமூகத்தின் உறுப்பினர்கள் பல்வேறு இசை, நடனப் பள்ளிகளையும் நடத்தி வருகின்றனர். அவற்றின் மாணவர்கள் பல்வேறு கலை வடிவங்களிலும் சிறந்து விளங்குகின்றனர்.

சிங்கப்பூரில் மற்ற எந்தப் பாரம்பரியச் சமூகங்களையும் போன்றே தமிழ் பிராமணச் சமூகமும் தங்கள் சமயக் கோட்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் பேணிக் காப்பதில் சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளது. பலர் தங்கள் சாதியின் தனித் தன்மையையும் சைவ உணவு உட்கொள்வதையும் தொடர்ந்து பின்பற்றினாலும் சிலர் இத்தகைய கோட்பாடுகளிலிருந்து விலகிச் சென்றுவிட்டனர். தமிழ் பிராமணர்கள், பாரம்பரியமும் தொன்மையான விழுமியங்களும் சார்ந்த தங்கள் அடையாளத்தின் வேர்களைக் கட்டிக் காக்கும் அதேவேளையில், சிங்கப்பூரில் செழிப்பாக வாழப் புதிய தலைமுறைகள், வாழ்க்கைமுறைகளின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.



மேல்விவரங்களுக்கு
“About Us.” The Singapore Dakshina Bharatha Brahmana Sabha. Accessed on 1 August 2025. https://www.sdbbs.org/about-us 
Ramanathan, Sankaran. Brahmin Pioneers in British Malaya: Profiles in Courage and Convictions. Outskirts Press, 2022
Ashvin Parameswaran, and Rodney Sebastian. “Who Is a Brahmin in Singapore?” Modern Asian Studies 41, no. 2 (2007): 253–86. http://www.jstor.org/stable/4132352 
“Untitled.” The Straits Times, 14 May 1950, 5. (From Newspaper SG)

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.



Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA