சிங்கப்பூர்த் தமிழ் முஸ்லிம்கள், பல நூற்றாண்டுகளுக்குமுன் தென்னிந்தியாவிலிருந்து கடல்வழியாகத் தென்கிழக்காசியப் பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்த அல்லது பயணித்த வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறலாம். இருப்பினும், சிங்கப்பூரில் ஒரு சமூகமாக அவர்களின் இடையறாத வரலாறு காலனித்துவக் காலத்தில்தான் தொடங்கியது.
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தக நிலையமாக 1819-இல் நிறுவப்பட்ட சிங்கப்பூரின் ஆரம்ப ஆண்டுகளில், அப்போது சூலியாக்கள் என்றழைக்கப்பட்ட தமிழ் முஸ்லிம்கள் இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மையாக இருந்தனர்: 1849-இல், சுமார் 6,260 இந்தியர்களில் அவர்கள் 79 விழுக்காட்டினர். இருப்பினும், 1931 வாக்கில், மொத்த இந்திய மக்கள்தொகை 13,330 ஆக அதிகரித்த போதிலும், இந்திய முஸ்லிம்களின் விழுக்காடு சுமார் 25-ஆகக் குறைந்தது. வளர்ந்துவந்த பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் பணிபுரியப் புலம்பெயர்ந்த முஸ்லிம் அல்லாத இந்தியர்களின் வருகையால் அம்மாற்றம் நிகழ்ந்தது. தற்போது சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தில் சுமார் 20% முஸ்லிம்கள் உள்ளனர்.
தமிழ் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரிவு ஜாவி பெரனாக்கான் என்னும் கலப்பினச் சமூகமாக உருவெடுத்தது; உள்ளூர் மலாய்ச் சமூகத்துடன் திருமண உறவுகளால் இணைந்து அவர்களின் மொழியையும் பழக்கவழக்கங்களையும் ஏற்றுக்கொண்டது. ஜாவி பெரனாக்கான் சமூகத்தில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஒருவர் முன்ஷி அப்துல்லா பின் அப்துல் காதிர். அவர் நவீன மலாய் இலக்கியத்தின் தந்தை என்று பரவலாகக் குறிப்பிடப்படுகிறார். அவரது பூர்விகம் இந்தியாவின் நாகூரில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தொடக்கக்காலத் தமிழ் முஸ்லிம் குடியேற்றங்கள் சிங்கப்பூர் ஆற்றையும் தெலுக் ஆயர் ஆற்றுப்படுகையையும் ஒட்டி இருந்தன. சுமார் 1890 வாக்கில், தஞ்சோங் பகாரில் ஒரு புதிய துறைமுகம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, அதிகமான மக்கள் அங்குக் குடியேறினர். படிப்படியாக, தமிழ் முஸ்லிம் வர்த்தகர்கள் அனைத்து வணிகப் பகுதிகளிலும் பிரிட்டிஷ் இராணுவத் தளங்களுக்கு அருகிலும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். அவர்களின் பல்வேறு தொழில்களில் ஜவுளி வர்த்தகம், நாணயமாற்று, கால்நடை வர்த்தகம், ரத்தின வியாபாரம், மளிகைக் கடை நடத்துதல் ஆகியவை அடங்கும். அவர்களின் தொழில் வாழ்க்கையில் பெரும்பாலும் ஓர் ஒட்டுக்கடையோ தேநீர்க்கடையோ தொடக்கப் புள்ளியாக இருந்திருக்கலாம். அவற்றுக்கு அதிக தேவை இருந்ததோடு, சிறிய மூலதனத்தில் கடினமாக உழைத்துத் தாக்குப்பிடிப்பதும் சாத்தியமானதாக இருந்தது. அவர்கள் குமாஸ்தாக்கள், முகவர்கள், உதவியாளர்கள், படகோட்டிகள் எனப் பல வேலைகளிலும் ஈடுபட்டிருந்தனர். சிலர் சொந்தப் படகுகளையும் தோணிகளையும் இயக்கியதோடு வாடகைக்கும் விட்டுக்கொண்டிருந்தனர். சிலர் துணிமணி விற்பனையிலும் மேலும் சிலர் இறைச்சி வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
தமிழ் முஸ்லிம்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் அவர்களின் பூர்விகப் பகுதிகளுடன் பின்னிப் பிணைந்திருந்தன. காரைக்கால், நாகப்பட்டினம், தோப்புத்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கால்நடைத் தொழிலில் ஈடுபட்டுவந்தனர். "கால்நடை மன்னன்" என்று அழைக்கப்படும் மூனா காதர் சுல்தான், காரைக்காலிருந்து இங்கு வந்து, இந்தியாவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் கால்நடைகளை இறக்குமதி செய்வதில் முக்கியப் பங்காற்றினார்; 1912-இல், ஸ்ட்ரெய்ட்ஸ் கேட்டல் புச்சரிங் கம்பெனியை நிறுவினார்; 1921 வாக்கில், சிராங்கூன் ரோடு பகுதியின் ஆக முக்கியமான தொழிலதிபர் ஆனார். நாகூர் முஸ்லிம்கள், முத்து, மாணிக்கம், வாசனைத் திரவியம், வெற்றிலைப் பெட்டி எனப் பல பொருள்களை இறக்குமதி செய்வதில் சிறந்து விளங்கினர். அவர்கள் கொட்டைப்பாக்கு வியாபாரத்திலும் முக்கிய இடம் பிடித்தனர். காயல்பட்டினம், மேலப்பாளையம்போன்ற கடலோர நகரவாசிகள் நீரிணைக் குடியேற்றங்களுடன் வணிகத்தில் ஈடுபட்டனர். தென்காசி, கடையநல்லூர் வட்டாரத்தினர் நெசவுத் தொழிலிலும் துணி உற்பத்தியிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தனர். அவர்களின் உற்பத்தியில், புகழ்பெற்ற "சிங்கப்பூர்த் துணியும்" அடங்கும். அந்தக் கடற்கரைப் பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் நெசவாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் சிங்கப்பூரில் குடியேறித் தமிழ் முஸ்லிம் சமூகம் நிலைபெற்று வளர வழியமைத்தனர். கடையநல்லூர், தென்காசிப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் 1880-களின் முற்பகுதியில், பள்ளிவாசல்களுக்கு அருகிலுள்ள திறந்தவெளிச் சந்தைகளில் மசாலாக் கலவைகளை விற்றனர். அது மலாய், பெரனாக்கான் சீன வாடிக்கையாளர்களிடையே இயல்பாக இந்தியச் சமையல் சென்றடைய உதவியதாகச் சிலர் கருதுகின்றனர்.
தமிழ் முஸ்லிம்களுக்குச் சமய வாழ்வு இன்றியமையாதது. சிங்கப்பூரில் உள்ள பெரும்பான்மையான தமிழ் முஸ்லிம்கள் சுன்னி இஸ்லாம், அதாவது ஹனஃபி அல்லது ஷாஃபியின், நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். இருப்பினும், பள்ளிவாசல்களில் அவர்கள் மற்றப் பிரிவைச் சேர்ந்த சக முஸ்லிம்களுடன் சேர்ந்தே தொழுகின்றனர்.
தமிழ் முஸ்லிம்களில், லெப்பை (சமயப் பணி), மரைக்காயர் (மாலுமி), ராவுத்தர் (குதிரைக்காரர்) போன்ற சில உட்பிரிவுகளும் உண்டு. ஒவ்வொரு உட்பிரிவும் ஒரு வட்டாரத்தில் தொடங்கி, அதற்கே உரிய பொருளாதார நடவடிக்கைகள், வட்டாரப் பின்னணிகள், குறிப்பிட்ட சட்டப் பள்ளிகள் போன்றவற்றின் அடிப்படையில் தனித்தன்மைகளுடன் தொடங்கியிருக்கலாம். ஆயினும், பொதுவான தொழில்களாலும் திருமண உறவுகளாலும் அவர்கள் ஒன்றிணைவதால், வேறுபாடுகளைக்காட்டிலும் தமிழ் முஸ்லிம்கள் என்னும் பொது அடையாளமே முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ் முஸ்லிம்கள், 1820-களுக்கும் 1920-களுக்கும் இடையில், நகர வட்டாரத்திலிருந்து சிக்லாப் வரை பல பள்ளிவாசல்களை நிறுவினர். ஜாமிஆ (சூலியா) மசூதி (பெரியப் பள்ளி), அல்-அப்ரார் மசூதி (குச்சுப் பள்ளி / ஜிலானிப் பள்ளி), அப்துல் கஃபூர் மசூதி, சுல்தான் மசூதி, ஹஜ்ஜா பாத்திமா மசூதி, திட்டச்சேரி மசூதி (மலபார் மசூதியாக மாற்றம் பெறுவதற்கு முன்பு), கதீஜா மசூதி, வாக் தஞ்சோங் மசூதி, காலித் மசூதி, மைதீன் மசூதி, காசிம் மசூதி ஆகியவை அவற்றுள் அடங்கும். கம்போங் பாயா கோயாங்கிலிருந்த மசூதியின் வருகையாளர்களிலும் கணிசமான தமிழ் முஸ்லிம் சமூகத்தினர் இருந்தனர். காலப்போக்கில், அப்பள்ளிவாசல்கள் பலவற்றின் நிர்வாகமும் அவற்றில் பயன்படுத்தப்படும் மொழிகளும் மாறிப்போயின. போருக்குமுன்பு, பல மசூதிகள் முகமதிய, இந்து அறக்கட்டளை வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. கொரோனேஷன் ரோடு மசூதியும் (தற்போது மஸ்ஜித் அல்-ஹுதா) காசிம் மசூதியும் 1960-களில் தம் தமிழ்த் தன்மையை இழந்தன. மேலும் பல தமிழரால் நிறுவப்பட்ட பள்ளிவாசல்கள் மலாய், அறபு அல்லது ஜாவி பெரனாக்கான் அறங்காவலரின்கீழ் வந்தன. மறுபுறம், மஸ்ஜித் பென்கூலனின் சமய உரை 1950-களுக்குப்பிறகு உருதுவிலிருந்து தமிழுக்கு மாறியது.
பள்ளிவாசல்களைக் கட்டுவதுமட்டுமின்றி, முஸ்லிம்களாகவும் வணிகர்களாகவும் தமது கூட்டு அடையாளத்தை வலுப்படுத்துவதற்காகச் சமூக அமைப்புகளைத் தமிழ் முஸ்லிம்கள் உருவாக்கிக்கொண்டிருந்தனர். இந்தியர் சங்கம், சிலோன் சங்கம் ஆகியவற்றிலும் செல்வந்தத் தமிழ் முஸ்லிம் வணிகர்கள் முக்கியமானவர்களாக இருந்தனர். ஏறக்குறைய 1890-களிலிருந்து செல்வாக்குடன் விளங்கிய முஸ்லிம் சங்கத்தின் படிப்படியான வீழ்ச்சியைத் தொடர்ந்து, 1932-இல் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட முஸ்லிம்களின் கூட்டுக் குரலாக முஸ்லிம் அறப்பணிக் கழகம் சிங்கப்பூர் அல்லது ஜாமியா சிங்கப்பூர் உருவாக்கப்பட்டது.
தஞ்சோங் பகாருக்கு அருகில் செயல்பட்ட பல உறவுசார் குழுக்கள், 1926-இல், முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எனப்படும் ஒரு பிரதிநிதித்துவ அமைப்பின்கீழ் கொண்டுவரப்பட்டன. பின்னர், கழகம் கலைக்கப்பட்டு, சிங்கப்பூர் தக்கலை முஸ்லிம் சங்கம் (1939), சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கம் (1940), சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் (1941) முதலிய அமைப்புகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன. பாசிர் பஞ்சாங் இந்திய முஸ்லிம் சங்கம் 1964-இல் நிறுவப்பட்டது. பின்னர், 1981-க்கும் 1984-க்கும் இடையில் ராடின் மாஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய தொழிற்சங்கத் தலைவர் எம்.கே. அப்துல் ஜப்பார் தலைமையில் அதன் பெயர் 1990-இல் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கமாக மாற்றப்பட்டது.
தமிழ் முஸ்லிம் சமூகம் தன் சங்கங்களை ஒருங்கிணைத்துப் பிரதிநிதிக்கும் ஓர் அமைப்பின்கீழ் கொண்டுவருவதற்கான தேவையை 1980-களில் உணர்ந்தது. முஸ்லிம்களுக்கான ஆலோசனை, அறக்கட்டளை நிர்வாகத்தை 1968-இல் கையிலெடுத்த சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம், மலாய்/முஸ்லிம் குழந்தைகளின் கல்வித்திறனை மேம்படுத்த 1982-இல் அமைக்கப்பட்ட சுய உதவி அமைப்பான யயாசன் மெண்டாக்கி போன்ற தேசிய, சமூக அமைப்புகளிடம் தமிழ் முஸ்லிம் சமூகத்தை அவ்வமைப்பு பிரதிநிதிக்கவேண்டிய தேவையை முன்னிட்டு, இந்திய முஸ்லிம் பேரவை 1992-இல் நிறுவப்பட்டது. பேரவையின் 30-ஆம் ஆண்டு விழாவில், அதன் பெயர் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பேரவை, 2023-ஆம் ஆண்டுவாக்கில், தமிழ்மொழி, சமூகம், சமயம் சார்பான நிகழ்ச்சிகளில் 18 நிறுவனங்களைப் பிரதிநிதிக்கும் அளவுக்கு வளர்ந்திருந்தது. தமிழ் முஸ்லிம்களால் நிறுவப்பட்ட மற்றொரு அமைப்பான இந்திய முஸ்லிம் சமூக சேவை சங்கம், முஸ்லிம் சமூகத்திற்கான நலன்புரி சேவைகளோடு சமய, பண்பாட்டுச் சேவைகளையும் வழங்குகிறது. இளம் தமிழ் முஸ்லிம்களால் அமைக்கப்பட்ட சமூகக் குழுக்களும் சமூகத்திற்குச் சேவை செய்கின்றன. அவர்களின் சமய, கலாசார, தொழில் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. நியமன நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய முகமது இர்ஷாத் நிறுவிய ரோஸஸ் ஆஃப் பீஸ், நஜத் ஃபஹீமாவால் நிறுவப்பட்ட ஹாஷ்.பீஸ், ராஜா முகமது நிறுவிய இம்ப்ராஃப் முதலியவை அவற்றுள் அடங்கும்.
தமிழ் முஸ்லிம்கள் தமிழ்மொழி பதிப்புத்துறை, இலக்கியம், கல்வி ஆகியவற்றிலும் வலுவாகப் பங்காற்றியுள்ளனர். முதலாம் உலகப் போருக்குமுன், அவர்கள் சிங்கப்பூரில் பெரும்பான்மையான தமிழ் அச்சகங்களையும் செய்தித்தாள்களையும் நடத்தியதோடு முஸ்லிம்களால் எழுதப்பட்ட பல தமிழ் நூல்களையும் வெளியிட்டனர்.
முதல் தனியார் தமிழ் அச்சகமான தீனோதய வேந்திரசாலை 1872 அல்லது 1873-இல் சி.கு. மகுதூம் சாயபுவால் நிறுவப்பட்டது. அது 1915 வரை கிராஸ் ஸ்ட்ரீட்டுக்கு அருகில் இருந்து, பின்னர் நார்த் பிரிட்ஜ் ரோட்டுக்கு மாற்றப்பட்டது. சிங்கப்பூரின் முதல் தமிழ் இதழ் என நம்பப்படும் சிங்கை வர்த்தமானி (1875) உட்பட குறிப்பிடத்தக்க செய்தித்தாள்களை அது அச்சிட்டது. அந்த அச்சகத்தின் பிற வெளியீடுகளுள் ஞானசூரியன் (1882), சிங்கை நேசன் (1887) ஆகியவையும் அடங்கும். அச்சகத்திலிருந்து தொடக்கக்காலச் சிங்கப்பூர்த் தமிழ் நூல்களும் வெளியிடப்பட்டன.
சிங்கப்பூரில், 1935-இல் நிறுவப்பட்டதிலிருந்து எஞ்சியிருக்கும் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசுவுக்குத் தமிழ் முஸ்லிம்கள், ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மெய்ப்புத் திருத்துநர்கள், விளம்பரதாரர்கள் எனக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்துள்ளனர். மேலும், 2011-இல், முகமது முஸ்தபா, தி சிராங்கூன் டைம்ஸ் என்னும் மாத இதழை நிறுவினார். அது தற்போது அச்சிலும் இணையத்திலும் கிடைக்கிறது.
சாயபுவுடன் இணைந்து அச்சகத்தை 1876 வரை நடத்திய என்.எம். முகமது அப்துல்காதர், சிங்கப்பூரின் முதல் தமிழ் நூலான முனாஜாத்துத்திரட்டு (1872) என்ற சமயக் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். கலாசாரப் பதக்க விருது பெற்ற அப்துல் ரஹ்மான் (சிங்கை முகிலன்), ஜே.எம். சாலி, க.து.மு. இக்பால் உட்பட வேறுசில தமிழ் முஸ்லிம்கள் முன்னணித் தமிழ் எழுத்தாளர்களாகவும் கவிஞர்களாகவும் விளங்கினர்.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் முஸ்லிம் சமூகத்தில் பெரிதும் மதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம்களுள் பாபு சாஹிப் என்று அழைக்கப்படும் உஸ்தாஸ் முகமது முஹ்யித்தீன் ஹஸ்புல்லாவும் ஒருவர். புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களை ஆதரிக்க அவர் தாருல் அர்கம் அமைப்பைத் தொடங்கினார். மற்றொருவர் உஸ்தாஸ் இப்ராஹிம் காசிம், முஸ்லிம் திருமணப் பதிவகத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர், சமய மறுவாழ்வுக் குழுவின் நிறுவன உறுப்பினர்.
தமிழ் முஸ்லிம்கள், ஆங்கிலப் பாடநூல்களையும் தேர்வுத் துணைப்பாடநூல்களையும் விற்பனை செய்வதில் முன்னணியில் இருந்தனர். பிராஸ் பாசா ரோட்டிலுள்ள அவர்களின் புத்தகக் கடைகளும் நன்கு அறியப்பட்டவை. பெனின்சுலா பிளாசா, குயின்ஸ்வே கடைத்தொகுதிகளில் விளையாட்டுத்துறைப் பொருள்களின் வர்த்தகத்திலும் சிறந்து விளங்குகின்றனர்.
திரைத்துறையிலும் தமிழ் முஸ்லிம்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடும் மிகச் சில திரையரங்குகளில் ஒன்றான டைமண்ட் தியேட்டரை கே.எம். ஒலி முகமது நார்த் பிரிட்ஜ் ரோட்டில் 1947-இல் நிறுவினார். அவர் பின்னர் கேலாங் செராயில் தாஜ் தியேட்டரைத் தொடங்கினார். அது மலாய்க்காரர்கள், இந்தியர்களிடையே இந்தித் திரைப்படங்களுக்காகப் பிரபலமானது. தமிழ் நாடகத்துறை, 1950-களில் தமிழ் நாடகங்களை அரங்கேற்றிய இப்ராகிம் பிள்ளை, மங்கல சாந்தியன் என அறியப்பட்ட அப்துல் சலாம் போன்றவர்களால் பயனடைந்தது.
தமிழ் முஸ்லிம்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாகவும் முத்திரை பதித்துள்ளனர். முகமது காசிம் நடிப்பிற்காக வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். முகமது அலி, 2003-இல், மீடியாகார்ப்பின் மலாய், தமிழ்த் தொலைக்காட்சிப் பிரிவுகளுக்குத் தலைமை வகித்தார். மற்றொரு தமிழ் முஸ்லிம், சீனி ஜாஃபர் கனி, சிங்கப்பூரிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் முஸ்லிம்களுக்கு பிஸ்மி இஸ்லாமிக் ரேடியோவை இணையச் சேவையாக 2018-இல் நிறுவினார்.
மற்ற துறைகளின் தமிழ் முஸ்லிம் முன்னோடிகளில் வெளிநாட்டு ஊழியர் தங்குமிடம், தளவாடத்துறைத் தொழிலதிபர் எஸ்.எம். அ. ஜலீல், சொத்துச் சந்தை விற்பனை, மேம்பாட்டுத்துறைத் தொழிலதிபர் முகமது இஸ்மாயில் கஃபூர் உள்ளிட்டோர் அடங்குவர். மேலும், முறையே, அவர்களது எம்.இ.எஸ். ஹோல்டிங்ஸ் ப்ராப்னெக்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்களின் மூலம் அவர்கள் பல சமூகத்தொண்டுகளுக்கான நிதியுதவியும் செய்துள்ளனர்.
தமிழ்மொழிக் கல்வியிலும் தமிழ் முஸ்லிம்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கால் 1946-இல் நிறுவப்பட்ட உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி, 1960 முதல் 1982 வரை சிங்கப்பூரில் ஒரே தமிழ்வழி உயர்நிலைப் பள்ளியாக விளங்கியது. கல்விப் பங்களிப்புகளுடன் தங்கள் சமூகத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் அறக்கட்டளைகளை நிறுவுவதிலும் தமிழ் முஸ்லிம்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். சிங்கப்பூரின் இந்திய முஸ்லிம் வணிகர்கள், 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து, சமய, தொண்டு நோக்கங்களுக்காகச் சொத்துகளையும் நிலபுலன்களையும் நன்கொடையாக அளித்து, முஸ்லிம் வக்ஃபுகளை (அறக்கட்டளைகள்) நிறுவியுள்ளனர்.
வசதிகுறைந்தோருக்கு உதவுவதற்காகத் தமிழ் முஸ்லிம்கள் பொதுவாக மலாய்/முஸ்லிம் சுய உதவி அமைப்பான மெண்டாக்கிக்கு உதவித்தொகை அளித்துவந்தனர். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் 1992-இல் நிறுவப்பட்டதும் பலர் அதற்கு மாற்றிக்கொண்டனர். சிண்டாவின் தொடக்கம் சிங்கப்பூரில் இந்தியர்களாகவும் முஸ்லிம்களாகவும் வாழும் தமிழ் முஸ்லிம்களின் தனித்தன்மை வாய்ந்த நிலையை எடுத்துக்காட்டியது.
சிங்கப்பூர்த் தமிழ் முஸ்லிம்கள் தங்கள் பண்பாட்டு மரபுடைமையைப் பேணிப் பாதுகாக்கின்றனர். இந்திய முஸ்லிம்களின், குறிப்பாகத் தமிழ் முஸ்லிம்களின், வரலாற்றுப் பங்களிப்புகளைச் சிறப்பிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் நாகூர் தர்காஇந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையம். தெலுக் ஆயர் ஸ்ட்ரீட்டிலுள்ள நாகூர் தர்காவில் 2011-இல் திறக்கப்பட்ட நிலையம் தேசிய நினைவுச் சின்னமாக அரசிதழில் இடம்பெற்றுள்ளது.
மேல்விவரங்களுக்கு
Mahiznan, Arun, and Nalina Gopal, eds. Sojourners to Settlers: Tamils in Southeast Asia and Singapore. Singapore: Indian Heritage Centre and Institute of Policy Studies, 2020.
Tschacher, Torsten. The Impact of Being Tamil on Religious Life among Tamil Muslims in Singapore. PhD diss., National University of Singapore, 2007.
Mashuthoo Abdul Rahiman, and Raja Mohamad. Singapore Tamil Muslims. Singapore: Singapore Kadayanallur Muslim League, 2021.
Chanbasha, Ab Razak. Indian Muslims in Singapore: History, Heritage, and Contributions. Singapore: Centre for Research on Islamic and Malay Affairs.
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |