தமிழ்க் கல்வி



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

சிங்கப்பூரில் காலனித்துவக் கால அரசாங்கத்தில், கல்விக்கென்று ஒரு சிறு அலுவலகம் இருந்தபோதிலும் ‘கல்வி அமைச்சு’ என்னும் அளவில் அதனை விரிவாக்கிக் கல்வித் துறையின் எதிர்காலத்திற்கு ஏற்புடைய அடித்தளம் நிறுவப்பட்டது 1955-ஆம் ஆண்டில்தான். தொழிலாளர் கட்சி ஆட்சியின்கீழ், சியூ ஸ்வீ கீ சிங்கப்பூரின் முதல் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதற்கடுத்த ஆண்டே, கல்வித் துறைச் சிக்கல்களைத் தீவிரமாக ஆய்வுசெய்து, மிக முக்கியமான சில கொள்கைகளையும் செயற்பாடுகளையும் அரசு முன்வைத்தது. அவற்றுள் இருமொழிக்கல்விக் கொள்கை மிக முக்கியமான ஒன்றாக விளங்கியது. ஒவ்வொரு மாணவருக்கும் தாய்மொழியும் ஆங்கிலமும் கற்பிக்கப்படவேண்டும் என்று அக்கொள்கை வலியுறுத்தியது. அந்தக் கொள்கையே சிங்கப்பூரில் தமிழ்மொழி நீடித்து நிலைபெற வழிவகுத்தது எனலாம். மேலும், அதன் அமலாக்கத்தின் முன்னெடுப்பாக 1958-இல் பாடத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு நிறுவப்பட்டது. அப்பிரிவு, தொடர்ந்து தமிழ்ப் பாடத்திட்ட உருவாக்கத்தையும் பள்ளிகளை மேற்பார்வையிடும் பணியையும் மேற்கொண்டுவந்தது. 

தொடக்கக் காலத்தில், தமிழ்மொழிக்கெனப் பாடநூல்களும் கற்றல் கற்பித்தல் வளமைகளும் உள்நாட்டில் தயாரிக்கப்படவில்லை. குறிப்பாக, தமிழகத்திலும் மலேசியாவிலும் தயாரிக்கப்பட்ட பாடநூல்கள் இங்குப் பயன்படுத்தப்பட்டன. ஆயினும், 1973-இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு பெருமுயற்சி அந்நிலை மாறுவதற்கு வித்திட்டது. உள்நாட்டுத் தமிழாசிரியர்களே தமிழ்ப் பாடநூல்களைத் தயாரிக்க முற்பட்டனர். அம்முயற்சி அதோடு நில்லாமல், சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் சிங்கப்பூரிலேயே ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ளவும் வழிகோலியது (காண்க: தேசிய கல்விக் கழகம்).

மேற்கண்ட மேம்பாடுகள் ஒருபுறம் நிகழ்ந்துகொண்டிருக்கும் அதேவேளையில், தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர் எண்ணிக்கை, பல்வேறு காரணங்களால் குறைந்துகொண்டே வந்தது. அந்நிலை, தமிழ்ப் பள்ளிகளில் மட்டுமன்றிச் சீனம், மலாய் ஆகிய மொழிப் பள்ளிகளிலும் காணப்பட்டது. அதன் விளைவாகத் தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட்டாலும், ஆங்கிலப் பள்ளிகளிலேயே அவரவர் தாய்மொழியைக் கற்பிக்க அமைச்சு முடிவெடுத்தது. இம்முடிவு, சிங்கப்பூர்க் கல்வி வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அது சர்ச்சைக்குரிய மாற்றமாக இருந்தபோதிலும், அதுவே சிங்கப்பூர்ச் சூழலில் நடைமுறைக்குச் சாத்தியமானதும் அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ளதுமாக இருக்கும் என்று அரசு கருதியது. அம்முடிவின் விளைவாக, தமிழ்ப் பள்ளிகளின் இருப்பு முடிவுற்றதோடு தமிழ்மொழியும் அழிந்துவிடும் என்று கருதி அஞ்சியோருக்கு, அருகிக்கொண்டே இருந்த தமிழ்ப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை திடீரெனப் பன்மடங்காகப் பெருகியமை நிம்மதி அளித்தது. குறிப்பாக, சிங்கப்பூரில் தமிழ்மொழிக்கு இது மறுமலர்ச்சி எனப்பலரும் கருதினர். அந்தக் காலக்கட்டத்தில்தான், தாய்மொழிகளை ஆங்கிலத்திற்கு அடுத்த இரண்டாம் மொழியெனும் நிலையில் கற்கவும் கற்பிக்கவும் புதிய கருத்தாடல்களும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. அவற்றின் பயனால், புதிய பயிற்றுகருவிகளும் கற்றல் கற்பித்தலுக்கான வளமைகளும் தயாரிக்கப்பட்டன. மேலும், மொழித்திறன் அடிப்படையில், ஆறு ஆண்டுகள் பயிலும் மாணவர்கள் வழக்கக் கல்விப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூடுதல் ஆதரவு தேவைப்படும் மாணவர்கள் எட்டு ஆண்டுகள் நீட்டிப்புக் கல்வியைச் சேர்ந்தவர்கள் என்றும் தரம் பிரிக்கப்பட்டனர்.

சிங்கப்பூர்க் கல்வி அமைச்சு, 1981-இல் சிறப்புநிலைப் பிரிவு, விரைவுநிலைப் பிரிவு, வழக்கநிலைப் பிரிவு ஆகியவற்றை அறிமுகம் செய்தது. பின்னர் அமைச்சு, 1994-இல் வழக்கநிலைப் பிரிவை வழக்கநிலை ஏட்டுக்கல்வி, வழக்கநிலைத் தொழில்நுட்பம் என்றும் பிரித்தது. அதன் பின்னர், 1995 முதல் விரைவுநிலையில் பயிலும் மாணவர்களுக்கு உயர் தாய்மொழிப் பாடங்களைப் படிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தமிழ்மொழியைக் கற்கச் சிரமப்படும் மாணவர்களுக்காகத் தமிழ்மொழி ‘B’ பாடத்திட்டம் 2001-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அவரவர் மொழித்திறனுக்கேற்பத் தமிழ்க் கல்வியைப் புகட்டுவதில் கல்வி அமைச்சு மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவ்வாறு, வாழ்க்கைச் சூழல், மொழிச் சூழல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மீண்டும் மீண்டும் மறுஆய்வு செய்து, தமிழ்மொழி கற்றலையும் கற்பித்தலையும் கல்வி அமைச்சு தொடர்ந்து மேம்படுத்திக்கொண்டே வந்துள்ளது. தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிப்பதில் உலகளவில் ஒரு முன்னோடியாகக் கருதப்படும் அளவிற்கு இன்று தமிழ்க் கல்வி சிங்கப்பூரில் வளர்ந்துள்ளது எனலாம்.  

சிங்கப்பூரில், தமிழ்க் கல்வியின் முக்கியத்துவம் அந்த மொழி எந்த அளவுக்கு ஒரு பயிற்றுமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே உள்ளது. அந்த வகையில், கல்வி அமைச்சு இயன்றவரையில் பல்வேறு புதிய கல்விக் கூறுகளைத் தாய்மொழிப் பாடங்களில் புகுத்திவருவதால், தமிழுக்கும் அந்த முக்கியத்துவம் தொடர்ந்திருக்கிறது. அதற்கோர் எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் 1959-இல், மாணவர்களுக்குக் குடியியல், ஒழுக்கம் ஆகியவற்றைக் கற்பிப்பதற்குப் பள்ளிகளில் ‘விழுமியக் கல்வி’ அறிமுகப்படுத்தப்பட்டது. அக்கல்வி, தொடக்கப்பள்ளிகளில் தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதால், தமிழ்மொழிக் கல்விக்கு மேலும் ஒரு தேவை ஏற்பட்டது. காலவோட்டத்தில் பற்பல மாற்றங்கள் நேர்ந்தபோதும், தாய்மொழிக் கல்வி இயன்றவரை புதுப்புதுக் கூறுகளைச் சேர்த்துக்கொண்டே வந்தமையால் தமிழ்மொழிக் கல்வியின் தேவையும் பயனும் கூடிக்கொண்டே வந்துள்ளது. 

பாடத்திட்டங்களையும் பயிற்று வளமைகளையும் தொடர்ந்து மெருகூட்டி வந்திருக்கும் கல்வி அமைச்சு, ஆசிரியர்களையும் இடையறாது மேம்படுத்திக்கொண்டே வந்துள்ளது. அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு, தமிழாசிரியர் பணித்திறன் மேம்பாட்டகம். தமிழாசிரியர்களைப் பயன்மிகு வகுப்பறை ஆசிரியர்களாக விளங்கச்செய்வதோடு அவர்களை ஆசிரியர் வழிநடத்துநர்களாகவும் கற்கும் சமூகத்தினராகவும் ஆக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது அம்மேம்பாட்டகம். அதன்வழி, தமிழ்மொழி கற்றல் கற்பித்தலின் தரத்தை உயர்த்துவதற்கு அது பங்காற்றியுள்ளது.  

தமிழ்க் கல்வியில் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து புகுத்திவருவது மற்றுமொரு முக்கிய வளர்ச்சி. சிங்கப்பூர்த் தமிழ்க் கல்வியில் தொழில்நுட்பம் ஊடுருவியிருக்கும் விதமும் பரப்பும் தமிழுலகத்தில் பாராட்டிப் பேசப்படுகின்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது. ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளில் இல்லாத தகவல் தொழில்நுட்பச் சவால்கள் தமிழுக்கு இருந்தபோதும், அவற்றைக் கடந்து பேரளவில் தொழில்நுட்பத்தைத் தமிழ்க் கல்வியில் புகுத்தியமை குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக, ‘Student Learning Space’ என்னும் மாணவர் கற்றல் தளம், ETDToGo, YouTube போன்ற மின்தளங்கள் மூலம் மற்ற மொழிகளைப் போலவே இன்று தமிழிலும் ஊடக வளங்களைப் பெறலாம்; கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளலாம்.

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டுக் கழகம், தேர்வுத் தாள்கள் தயாரிக்கும் பொறுப்பை மேற்கொண்டுவருகிறது. அதிலுள்ள தமிழ்மொழிப் பிரிவு, ஆண்டுதோறும் தேசியநிலையில் தமிழ்மொழிக்குரிய தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வையும் சிங்கப்பூர்-கேம்பிரிட்ஜ் பொதுக் கல்விச் சான்றிதழுக்குரிய சாதாரணநிலைத் தேர்வையும் வழக்கநிலைத் தேர்வையும் மேல்நிலைத் தேர்வையும் நடத்திவருகிறது. இன்று தேசியநிலையில் ஏனைய தாய்மொழிப் பாடங்களோடு தமிழ்மொழிப் பாடங்களும் மின்னியல் தேர்வுமுறைகளின் அடிப்படையில் நடைபெறுகின்றன. தமிழாசிரியர்கள் தேசியநிலையில் கணினிவழித் திருத்தும் பணிகளில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக, சிங்கப்பூர் அரசு, கல்வி அமைச்சு தொடங்கிய காலந்தொட்டு, பாலர் கல்வியைத் தனியார் துறையின் கையிலேயே விட்டுவைத்திருந்தது. ஆனால், பின்னர், கல்வியாளர் பலரின் வேண்டுகோளுக்கிணங்க, பாலர் கல்வியைக் கையிலெடுத்துப் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியது. அவற்றுள் முக்கியமான ஒன்று 2013-இல் உருவாக்கம் கண்ட பாலர் பள்ளிகளுக்கான பாடக்கலைத்திட்டம். இப்பாடக்கலைத்திட்டம் தரமான பாலர் கல்வியை ஆங்கில மொழியிலும் தாய்மொழிகளிலும் (தமிழ்/சீனம்/மலாய்) வழங்குகிறது. இன்று கல்வி அமைச்சின்கீழ்ச் செயற்படும் பாலர் பள்ளிகள் அனைத்திலும் தமிழ்மொழி பயிற்றுவிக்கப்படுகிறது.

அடுத்து, கல்வி அமைச்சு 2010-இல் நடத்திய தாய்மொழிகளுக்கான மறுஆய்வின் பரிந்துரையின்படி, தேசியத் தமிழ்மொழி விருப்பப் பாடம் என்னும் புதிய பாடத்தை 2012-இல் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் அறிமுகம் செய்தது. இப்பாடத்தைத் தகுதிவாய்ந்த உயர்நிலை, புகுமுகநிலை மாணவர்கள் பயில்வதன்மூலம் தங்கள் தமிழ்மொழி ஆற்றலை வளர்த்துக்கொள்கின்றனர். பின்னர், கல்வி அமைச்சு 2020-ஆம் ஆண்டில், தமிழ் இலக்கியப் பாடத்தை மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் பயிலவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழ்மொழி விருப்பப்பாடத் திட்டத்தைச் சில உயர்நிலைப்பள்ளிகளிலும் தொடக்கக்கல்லூரிகளிலும் அமலாக்கம் செய்தது. அதன் இலக்கு, தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு ஆகியனபற்றிய புரிந்துணர்வை மாணவர்களிடத்தில் வளர்ப்பதோடு அவர்களை இருமொழியாற்றல் மிக்கவர்களாக உருவாக்குதலாகும். 

சிங்கப்பூர்க் கல்வி அமைச்சு வரலாற்றில் முதன்முறையாக, 2015-ஆம் ஆண்டில், தமிழ்மொழிப் பிரிவின் தலைவராகத் தாய்மொழிகள் துறையின் துணை இயக்குநர் என்னும் பொறுப்பில் திருவாட்டி சாந்தி செல்லப்பன் அமர்த்தப்பட்டார். அதுவரையிலும், தமிழ்மொழிப் பிரிவுத் தலைவரின் ஆக உயர்ந்த பதவி உதவி இயக்குநர் என்னும் அளவில்தான் இருந்தது. தமிழ்மொழிக் கல்விக்கான கூடுதல் அங்கீகாரத்தை இந்த நகர்வு குறிக்கிறது.  



மேல்விவரங்களுக்கு
Doraisamy, Theodore R. 150 Years of Education in Singapore. Singapore: TTC Publications Board, 1969
Gopinathan, S. Education. Singapore: Institute of Policy Studies and Straits Times Press, 2015. (Call no.: RSING 370.95957 GOP)
Ministry of Education. Accessed 1 August 2025. https://www.moe.gov.sg/
Wikiwand. “Ministry of Education (Singapore),” Accessed 1 August 2025. https://www.wikiwand.com/en/Ministry_of_Education_(Singapore)

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA