கோ. சாரங்கபாணி என்றும் கோ.சா. என்றும் பரவலாக அறியப்படும் கோவிந்தசாமி சாரங்கபாணி (1903 - 1974), சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் முன்னணித் தலைவர்களுள் ஒருவர். தலைசிறந்த தமிழ்ப் பத்திரிகையாளர், சீர்திருத்தவாதி, சிதறிக்கிடந்த தமிழ்ச் சமூகத்தை ஒன்றிணைத்தவர் எனப் போற்றப்படுபவர். சிங்கப்பூர், மலேசியாவில் வாழும் இந்திய, தமிழ்ச் சமூகங்களின் முன்னேற்றத்திற்காகவும் ஒருமைப்பாட்டுக்காகவும் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டவர். இரு நாடுகளிலும் தமிழ்க் கல்வி, கலை, இலக்கியம் தழைக்கவும் தமிழ்ப் பண்பாடு வேரூன்றவும் வித்திட்டவர்களில் முதன்மையானவர். தமிழ்ப் பத்திரிகை உலகில் 90 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கும் ஒருசில நாளிதழ்களுள் ஒன்றான தமிழ் முரசு இதழை வளர்த்தெடுத்தவர்.
சாரங்கபாணி இந்தியாவின் திருவாரூரில் 20 ஏப்ரல் அன்று பிறந்தார். திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்றுத் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பயிற்சிபெற்ற அவர், பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சிக்குப்பின், 1924-இல் தமது 21-ஆவது வயதில் பிழைப்புத் தேடி சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரில் பெரும் வர்த்தகராக இருந்த ப. இப்ராகிம்ஷா கடையில் கணக்கராக வாழ்க்கையைத் தொடங்கியதாகவும் உழைப்பாலும் திறமையாலும் வெகுவிரைவில் நிர்வாகியாக உயர்ந்ததாகவும் அவர் பற்றிய நூல்கள் தெரிவிக்கின்றன.
சாரங்கபாணி 1930 வாக்கில் அசோகா டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் சிலிகி ரோட்டில் ஒரு நிறுவனத்தை அமைத்து, பிற வணிகங்களோடு, அச்சு வேலைகளுக்கு முகவராகவும் தொழில் நடத்தினார். இடையே, 1929-இல் தொடங்கப்பட்ட முன்னேற்றம் என்னும் வார இதழின் ஆசிரியராக 1930-இல் பொறுப்பேற்றார். தொடர்ந்து, 1933-இல் சிலிகி ரோட்டில் இயங்கிய ஸ்டார் பிரஸ் என்ற அச்சுக்கூடத்தை வாங்கினார்.
சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்னரே, தமிழகத்தில், பெரியார் என்று பரவலாக அறியப்பட்ட ஈ.வெ. ராமசாமி தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டிருந்த சாரங்கபாணி, சிங்கப்பூரில் சுயமரியாதைச் சிந்தனையைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றினார். பெரியாரின் முதல் மலாயா வருகை 20 டிசம்பர் 1929 அன்று தொடங்கியது. அவ்வருகையின் விளைவாக, சாரங்கபாணி, ஓ. ராமசாமி நாடார், அ.சி. சுப்பய்யா, பி. கோவிந்தசாமி செட்டியார் உள்ளிட்டோருடன் இணைந்து 1930-களின் தொடக்கத்தில் சிங்கப்பூரில் தமிழர் சீர்திருத்தச் சங்கம் என்னும் சமூக அமைப்பைத் தொடங்கினார்.
பகுத்தறிவுப் பரப்புரை, மேடை நாடக சபை, விளையாட்டுத் துறை, தொண்டர் படை, இரவு வகுப்பு எனப் பல்வேறு தளங்களில் சங்கத்தின் நடவடிக்கைகளை அவர் விரிவாக்கினார். சங்கத்தின் வார இதழாகத் தமிழ் முரசு 6 ஜூலை 1935 அன்று வெளிவரத் தொடங்கியது. அத்துடன் ரிஃபார்ம் என்னும் ஆங்கில மாத இதழையும் ஜூலை 1936-இலிருந்து சங்கம் வெளியிட்டது. சங்கத்தின் செயலாளரான சாரங்கபாணி, இரு இதழ்களுக்கும் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். ஸ்டார் பிரஸ் அச்சக அனுபவத்தின் வழியாகப் பத்திரிகைத் துறையின் நெளிவுசுளிவுகளை அறிந்துகொண்டார். தொடங்கிய சில வாரங்களிலேயே தமிழ் முரசு இதழைக் கைவிடச் சங்கம் முடிவு செய்தபோது, அதனைத் தமது பொறுப்பில் ஏற்றார்.
அடுத்து, இந்தியச் சமூகத்தின் குரலை அதிகார வர்க்கத்துக்கு எட்டுமாறு செய்வதோடு அனைத்து இந்தியரையும் ஒன்றிணைப்பதையும் நோக்கமாகக்கொண்டு 1939-இல் இந்தியன் டெய்லி மெயில் என்னும் ஆங்கில நாளிதழைச் சாரங்கபாணி தொடங்கினார். பல ஆண்டுகள் பொருளிழப்பிலேயே நடைபெற்ற இதழ் 1956-இல் நிறுத்தப்பட்டது. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தமிழ் முரசு மிக அதிகமாக விற்பனையான நாளிதழாக 1950-களிலும் 60-களிலும் ஓங்கி இருந்த காலத்தில், கோலாலம்பூரிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த தேச தூதன் எனும் மாலை நேர நாளிதழையும் அவர் சில ஆண்டுகள் நடத்தினார். தமிழ் முரசு ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டு, 3 ஜூலை 1963 முதல் 10 ஜூலை 1964 வரை, ஓராண்டுக் காலம் வேலை நிறுத்தம் செய்ததன் காரணமாகச் சாரங்கபாணி இதழ் வெளியீட்டை நிறுத்திவைத்திருந்தார். தமிழ் முரசு மீண்டும் வெளியாகத் தொடங்கிய பின்னர், இடைக்காலத்தில் தொடங்கப்பட்ட மற்றொரு நாளேடான தமிழ் மலருடன் போட்டியை எதிர்கொண்டது. தமிழ் மலர் 1980-இல் நின்றுபோனபோதும் தமிழ் முரசு இன்றுவரை நீடிக்கிறது.
சாரங்கபாணி, சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் மொழி, கலை, இலக்கிய வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளார். தமிழ் முரசு மூலமாக ஏராளமான எழுத்தாளர்கள் சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுத வாய்ப்பை உருவாக்கினார். இலக்கிய விவாதங்கள் தம் நாளிதழில் நடக்க ஊக்குவித்தார். இலக்கிய ரசனையை வளர்க்கும் நோக்கில் 'ரசனை வகுப்பு' என்ற பகுதியை, 19 ஏப்ரல் 1952 அன்று, கந்தசாமி வாத்தியார் என்ற புனைபெயர் கொண்ட சுப. நாராயணனைக்கொண்டு தமிழ் முரசுவில் தொடங்கினார். மேலும், இளம் தலைமுறையினரிடம் எழுத்தார்வத்தை வளர்க்க 2 மே 1952 அன்று ‘மாணவர் மணி மன்றம்’ என்னும் பகுதியையும் தொடங்கினார். தொடங்கிய ஓராண்டிலேயே 7,500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மன்றத்தில் இணைந்தனர். அந்த மன்றம் வழி உருவான ரெ. கார்த்திகேசு, சை. பீர்முகம்மது, அரு.சு. ஜீவானந்தன், மா. இளங்கண்ணன், ஐ. உலகநாதன், இராம. கண்ணபிரான், அமலதாசன், க.து.மு. இக்பால், சா.ஆ. அன்பானந்தன், சீனி நைனா முகம்மது, மு. அன்புச்செல்வன் முதலியோர் 1970-களில் மலேசியா, சிங்கப்பூரில் தனித்த அடையாளத்துடன் இலக்கியம் வளர முக்கியப் பங்காற்றினர். மலேசியாவின் மிகப் பழமையான, முன்னணி இந்திய இளைஞர் அமைப்புகளில் ஒன்றாக இன்றும் மாணவர் மணி மன்றம் திகழ்கிறது.
சிங்கப்பூரில், தனித்தனியே செயற்பட்டுக்கொண்டிருந்த படைப்பாளிகளை ஒன்றிணைக்க, சாரங்கபாணி, 5 ஜூலை 1952 அன்று, வை. திருநாவுக்கரசு தலைமையில் ‘எழுத்தாளர் பேரவை’ என்னும் அமைப்பைத் தொடங்கினார். அதோடு மாதாந்திரச் சிறுகதைப் போட்டி, வெண்பாப் போட்டி, விருத்தப்பாபோட்டி என ஏற்பாடு செய்து, பரிசுகளை வழங்கி, பலரையும் எழுத ஊக்குவித்தார்.
மேலும், சாரங்கபாணி தமிழ் முரசு நாளிதழைத் தன் சமூகச் செயல்பாட்டுக்கான கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார். வசதி குறைந்தோர், விளிம்புநிலையினர்மீது அவரது கவனம் இருந்தது. காலனித்துவக் காலத்தில், தோட்டத் தொழிலாளிகள், நாள்சம்பள ஊழியர்களின் உரிமைகளுக்காக ஆட்சியாளர்களிடமும் முதலாளிகளிடமும் பேசும் குரலாக அவர் இருந்தார்.
இந்துத் திருமணங்களைச் சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்ய வலியுறுத்திய ஓர் இயக்கத்தை 1930-களிலிருந்து மாதர் சாசனம் 1961-இல் நடைமுறையாகும் வரை விடாப்பிடியாக நடத்தினார்.
இரண்டாம் உலகப் போருக்குப்பின் சிங்கப்பூரிலிருந்த 35-க்கும் மேற்பட்ட தனியார் தமிழ்ப் பள்ளிகள் செயல்பட முடியாமல் தத்தளித்தபோது, அரசாங்கத்துடன் வாதாடி அவற்றுள் 23 பள்ளிகளை அரசாங்க உதவிபெறும் பள்ளிகளாக மாற்றி நிலைபெறச் செய்தார். அவற்றை மேற்பார்வையிட 1948-இல் தமிழ்க் கல்விக் கழகத்தை அமைத்து அதனைத் தலைமை ஏற்று நடத்தினார்.
சாரங்கபாணி, தமிழ்க் கல்வியின் முன்னேற்றம், மலாயாப் பல்கலைக் கழகத்தில் இந்தியக் கல்வித்துறையின் அமைப்பு, அதற்கான தமிழ் நூல் நிலையம் ஆகியவற்றுக்கு ஆதரவு தேடிப் போராடினார். தமிழர்களின் உயர்வுக்கு கல்வியே ஆதாரமாக இருக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்த அவர், தமிழ் உயர்நிலைப் பள்ளியும் பின்னர் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையும் வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். அதன் பயனாக, சிங்கப்பூரின் உமறுப்புலலர் தமிழ் உயர்நிலைப் பள்ளி 1960-இல் துவங்கப்பட்டது.
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும், துறை நூலகமும் சிங்கப்பூரில் சாரங்கபாணியின் முயற்சியால் அமைக்கப்பட்டவை. அவை உருவாவதில் பலரும் பலவகைகளில் செயல்பட்டிருந்தாலும்கூட அக்காலப்பகுதியில் முதன்மை ஊடகமாக இருந்த தமிழ் முரசு இதழ்வழி சாரங்கபாணி மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகப் பெரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்தன. பலரின் தொடர் அழுத்தங்களைத் தொடர்ந்து 1956-இல் இந்தியவியல் துறை தொடங்கப்பட்டது. மலாயாவில் வாழும் இந்தியர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள் என்பதால் இந்தியவியல் துறையில் தமிழ் மொழி முதலிடம் பெறவேண்டும் என்றும் தமிழ் முரசு மூலம் தொடர்ந்து குரல் எழுப்பினார். தமிழ் மக்களின் உணர்வைத் தட்டியெழுப்பி, அத்துறை செயல்பட நிதிதிரட்டவும் அயராது முயன்றார். 'தமிழ் எங்கள் உயிர்' எனும் நிதி உருவாக்கப்பட்டு, இரண்டே மாதத்தில் 27,500 வெள்ளி திரட்டப்பட்டது. நூலகத்திற்கு 7,500 நூல்களும் அளிக்கப்பட்டன.
தமிழ்ச் சமூகத்தில், 50-க்கும் மேற்பட்ட சிறுசிறு சங்கங்களாகச் சிதறிக் கிடந்த அமைப்புகளை ஒருங்கிணைக்க, 1 ஆகஸ்ட் 1951 அன்று, தமிழர் பிரதிநிதித்துவ சபை (பின்னர் தமிழர் பேரவை எனப் பெயர் மாற்றம் கண்டது) என்னும் கூட்டமைப்பை அவர் உருவாக்கினார். சமூகநலனை மேம்படுத்தச் சபையை ஒரு கருவியாக அவர் பயன்படுத்தினார். அக்கூட்டமைப்பு அமைக்கப்பட்ட பிறகு அவர் உருவாக்கிய பேரியக்கம் தமிழர் திருநாள்.
தமிழர் திருநாள் விழா, 13 ஜனவரி 1952 அன்று சாரங்கபாணியால் தொடங்கிவைக்கப்பட்டது. அதனைச் சமய, வர்க்க, தேச வேறுபாடுகளின்றி தமிழர்களை ஒன்றிணைத்த ஒற்றுமைத் திருநாளாகவும் தமிழர்களின் ஆற்றல்களை வளர்க்கும் பயிற்சிக் களமாகவும் உருவாக்கினார். கல்வி, கலை, விளையாட்டு, சமூகத் தொண்டு எனப் பரந்துபட்ட தளங்களில் செயல்படும் விழாவாகத் தமிழர் திருநாளை வளர்த்தெடுத்தார். சிங்கப்பூரில் ஆண்டுதோறும் மூன்று நாள்கள் நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் ஒருகட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பெருவிழாவாக இருந்துள்ளன. அன்றைய பிரதமர் லீ குவான் யூ உள்ளிட்ட தலைவர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ஆயினும், பின்னாளில், உட்பூசல்கள், தலைமைத்துவச் சரிவு முதலிய காரணங்களால் அவ்விழா நலிவடைந்துபோனது.
சாரங்கபாணி சிங்கப்பூரில் ஆற்றிய முக்கியச் சமூகப்பணிகளுள் மற்றொன்று, இங்கு வாழ்ந்த தமிழரைச் சிங்கப்பூர்க் குடியுரிமை பெறச் செய்தது. பாட்டாளி மக்கள் பலரும் இந்நாட்டுக் குடியுரிமையைப் பெறத் தயங்கியபோது, பத்திரிகையில் அதுகுறித்து எழுதியதுடன், சிராங்கூன் ரோட்டிலேயே ஒரு குடியுரிமைப் பதிவு அலுவலகம் திறக்கப்படவும் பதிவுசெய்ய விழைவோருக்கு முறையாக விண்ணப்பிக்கவும் ஆவன செய்தார்.
குன்றக்குடி அடிகள் 1955-இல் கோலாலம்பூர் வந்திருந்தபோது சாரங்கபாணிக்குத் ‘தமிழவேள்’ எனும் பட்டமளித்துப் பாராட்டினார். அன்றிலிருந்து, தமிழுலகம் அவரைத் தமிழவேள் என்றே மரியாதையுடன் குறிப்பிடுகிறது. சாரங்கபாணி நூற்றாண்டு விழா மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் 2003-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. சிங்கப்பூரில் அவர் பெயரில் ‘கோ. சாரங்கபாணி கல்வி அறநிதி’ அமைத்து அதற்கு 1.1 மில்லியன் வெள்ளியை 18 ஜனவரி 2004 அன்று சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளையிடம் சமூகம் நன்கொடையாக அளித்தது. மலேசியாவில் அவரைக் குறித்த மாநாடுகளும் ஆய்வுகளும் நடத்தப்பட்டதுடன், கெடா மாநிலத்தில் 2015-இல் கட்டப்பட்ட ஒரு தமிழ்ப் பள்ளிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2007-இல் எம்.ஏ. முஸ்தபா அறக்கொடையின் சார்பில் ‘கோ. சாரங்கபாணி தமிழ் இருக்கை’ அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் முரசு தற்போது எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டாலும், ‘நிறுவனர்: தமிழவேள் கோ.சாரங்கபாணி’ என நாளிதழின் முகப்பில் இடம்பெறச் செய்ததன்வழியாக அவரை அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் நினைவுகூர்கின்றனர்.
தமிழர்களின் தலைவராக உருவெடுக்கத் தொடங்கிய காலக்கட்டத்திலேயே, சாரங்கபாணி, 1937-இல் அவருக்கு மிகவும் உதவியாக இருந்த சீனப் பெரனாக்கான் பெண்ணான லிம் பூன் நியோ என்பாரை மணந்தார். சர்ச்சைக்குரிய திருமணமாக இருந்தபோதும், அவருடைய பொதுவாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழவேள் கோ. சாரங்கபாணி 16 மார்ச் 1974 அன்று, சிங்கப்பூர் பொது மருத்துவமனையில், 71-ஆம் வயதில் காலமானார்.
மேல்விவரங்களுக்கு
“A voice to unite a people.” The Straits Times, 12 May 1989, 6. (From Newspaper SG)
“By the By Selegie Road.” Indian Daily Mail, 5 December 1952, 2. (From Newspaper SG)
“Obtain Citizenship Of Malaya Bestow Unflinching Loyalty.” Indian Daily Mail, 10 March 1952, 1. (From Newspaper SG)
“G Sarangapany.” Indian Hall of Fame Singapore. Accessed 1 August 2025. https://indianhalloffame.sg/?page_id=20428
கோ. சாரங்கபாணியும் தமிழ் முரசும் – இன்றைய பார்வை. சொந்த வெளியீடு, 2016.
Sivakumaran, A. Ra. சிங்கப்பூர்த் தமிழ்ப் படைப்பிலக்கிய வளர்ச்சியில் கோ சாரங்கபாணியின் பங்கு. Malaysia: Sarangapani Research Conference, 2000.
கணேசன், அபிராமி. “மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்.” வல்லினம், 1 July 2020. https://vallinam.com.my/version2/?p=6999.
கணேசன், அபிராமி. “தமிழ் எங்கள் உயிர் (பாகம் 2).” வல்லினம், 1 September 2020. https://vallinam.com.my/version2/?p=7106.
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |