கள்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

கள், தென்னை மரத்தின் குருத்துகளிலிருந்து வடித்தெடுக்கப்படும் சாறு. நொதித்தபின் அருந்தப்படும் கள்ளில் சுமார் ஐந்து முதல் எட்டு விழுக்காட்டு மதுத்தன்மை இருக்கும். சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் காலனித்துவக் காலத்திலிருந்து கள்ளுக்குத் தமிழ்ச் சமூகத்துடன் நீண்ட தொடர்பு உண்டு. சிங்கப்பூரில் 1950-களின் நடுப்பகுதி வரை அடித்தட்டு இந்தியத் தொழிலாளர்களிடையே கள் பிரபலமான பானமாக இருந்தது. சமூகச் சீர்திருத்தங்கள், அரசாங்கக் கட்டுப்பாடுகள், நவீனமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், 1970களின் இறுதியில், கள்ளும் அது கொணர்ந்த சிக்கல்களும் படிப்படியாகக் காணாமற்போயின. இருப்பினும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இறக்குமதி செய்யப்பட்ட இதர பல மதுபானங்களைப்போலவே கள்ளும் புட்டிகளில் இங்கு விற்கப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தென்னை மரங்களிலிருந்து அன்றாடம் இருமுறை கள் சேகரிக்கப்பட்டுத் தீவு முழுவதும் உள்ள பல்வேறு கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. ஒரு குவளை, 1930-களில், ஐந்து காசு மட்டுமே. அதனால், குடிவெறியில் கள்ளுக்கடைகளிலும் அவற்றுக்கு அருகிலும் அடிக்கடி சண்டைகளும் அநாகரீகச் செயல்களும் நடந்தன. மேலும், இந்தியத் தொழிலாளர்கள் தம் அன்றாட ஊதியத்தில் கணிசமான பகுதியைக் கள்ளுக்கே செலவிடுவதாகப் புகார்களும் எழுந்தன.

கள் குடிப்பதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் சமூகத்திடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் 1929-1930 காலக்கட்டத்தில் தொடங்கின. இந்தியாவின் சுயமரியாதை இயக்கத் தலைவரான ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் உதவியை உள்ளூர் இந்திய சமூகத் தலைவர்கள் நாடினர். அவர் 1929-இல் சிங்கப்பூருக்கு வந்தபோது கள் அருந்துவதைக் கைவிடத் தமிழ்ச் சமூகத்தை வலியுறுத்தினார். தமிழ்த் தொழிலாளரிடையே சுயமரியாதையை ஊக்குவிப்பதில் கள்ளைத் தவிர்ப்பதும் முக்கிய அம்சமாக இடம்பெற்றது. தமிழர் சீர்திருத்தச் சங்கம், தமிழர் பிரதிநிதித்துவ சபை முதலிய சீர்திருத்த அமைப்புகள் கள் குடிப்பதற்கு எதிராகத் தீவிரப் பரப்புரை ஆற்றின.

கள்ளுக்கடைகளின் எண்ணிக்கையையும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தையும் படிப்படியாகக் குறைக்கக் காலனித்துவ அரசாங்கத்தின் கொள்கைகள் 1930-இல் அறிமுகமாயின. அதைத் தொடர்ந்து, கள் ஒப்பந்ததாரர்கள் விநியோகிக்கும் கள்ளின் தரம் குறித்த கவலையின் காரணமாக, தனியார் உரிமம் பெற்ற அனைத்துக் கள்ளுக்கடைகளையும் அரசு படிப்படியாக அகற்றத் தொடங்கியது. அதன்மூலம் சிங்கப்பூரின் கள் வர்த்தகம் ஏறத்தாழ பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகத்தின் ஏகபோக உரிமையானது. தனியார் உரிமத்தில் இயங்கிய 25 கடைகள் 1930-39 காலக்கட்டத்தில் மூடப்பட்டு, அரசு கட்டுப்பாட்டில் இருந்த 10 கடைகள் மட்டும் தொடர்ந்து இயங்கின. 

ஜப்பானியர் ஆக்கிரமிப்புக் காலத்தில், 1942 முதல் 1945 வரை, கள் குடிக்கும் பழக்கம் இந்தியச் சமூகத்திற்கு அப்பாலும் பரவியது. அந்த நேரத்தில், சிங்கப்பூரில் பரவியிருந்த பெரிபெரி நோயைக் கள் குணப்படுத்தும் என்ற நம்பிக்கையின் காரணமாகப் பலர் கள் குடித்தனர். அது அவர்களுக்குப் பழக்கமாகித் தொடர்ந்து நீடித்தது. இருப்பினும், போருக்கு முன்பு சுமார் 500 கேலன்களாக இருந்த அன்றாட விற்பனை, 1950களின் முற்பகுதியில் சுமார் 100 கேலன்களாகக் குறைந்தது. இந்தியத் தொழிலாளர் வர்க்க மக்கள்தொகை கணிசமாகக் குறைந்ததே அதற்கு முதன்மைக் காரணம் எனக் கருதப்பட்டது. அதைத்தொடர்ந்து, 1951வாக்கில், கள்ளுக்கடைகளின் எண்ணிக்கை ஐந்தாகக் குறைந்தது. ரோச்சோர் கேனல் ரோடு, செயின்ட் ஜார்ஜஸ் ரோடு, நியூட்டன் சர்க்கஸ், ஓர்ட் ரோடு, தஞ்சோங் பகார் ஆகிய இடங்களில் அவை செயல்பட்டன. ஓர்ட் பாலம் ‘கள்ளுப்பாலம்’ என்று அறியப்பட்டது.

சில பொருளாதார நன்மைகள் இருந்தபோதிலும், கள்ளுக்கடைப் பகுதிகளில் சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பது அரசாங்கத்துக்குச் சவாலாக இருந்தது. ஆகவே, அரசின் கொள்கைகளும் நடைமுறைகளும் தொடர்ந்து மறுபரிசீலனை செய்யப்பட்டன. கள்ளுக்கடைகளைத் திறம்படக் கண்காணிப்பது குறித்த கவலைகள் 1950-களில் அதிகரித்ததால் கடைகளை நவீனமயமாக்குவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டது. இந்திய, சீன குண்டர் குழுக்களால் கள்ளச் சந்தையில் கள் விற்பனை தொடங்கப்பட்டதும் நிலைமை மேலும் மோசமடைந்தது. அக்குழுக்கள், தனியார் கூடங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட கள்ளுக்கடைகளுக்கு அருகிலும் கலப்படக் கள்ளை விற்றனர். ராஃபிள்ஸ் கீ, கொலம்போ கோர்ட் பகுதிகளிலும் நகரின் பிற பரபரப்பான தெருக்களிலும் கள்ளச்சந்தை கள் தாராளமாகக் கிடைத்தது. 

கள்ளுக்கடைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோதிலும், விநியோகச் சங்கிலி ஒரு சில ஒப்பந்தக்காரர்கள், கள் இறக்கும் இந்தியத் தொழிலாளர்கள் ஆகியோரின் கைவசமிருந்தது. சிங்கப்பூர்க் கள் இறக்குவோர் சங்கம் 1957-இல் நிறுவப்பட்டது. சிங்கப்பூர் 1959-இல் முழுச் சுயாட்சி உரிமை பெற்றபோது, கள் ஒப்பந்தக்காரர்கள் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொண்டனர். கள்ளின் அளவோ தரமோ குறைந்தால் ஒப்பந்தக்காரருக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர் சுதந்திரமடைந்து ஈராண்டுக்குப் பிறகு, 1967-இல், அரசாங்கத்தால் நடத்தப்பட்ட நான்கு கள்ளுக்கடைகளுக்கும் கள் வழங்க ஒரே ஓர் ஒப்பந்தக்காரர் மட்டுமே எஞ்சியிருந்தார். ஒரு குவளை 50 காசு என்ற அளவுக்குக் கள்ளின் விலை 1970-களில் உயர்ந்தது. நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்காகத் தென்னை மரங்கள் இருந்த நிலங்களைக் கையகப்படுத்த வேண்டியிருந்ததால் கள் உற்பத்தி தொடர்ந்து குறைந்தது. மேலும், கள் இறக்குவதை ஒரு தொழிலாகத் தொடர உள்ளூர்க்காரர்கள் தயங்கியதால் மலேசியாவில் இருந்து வேலைக்கு ஆள்களைக் கொண்டுவர வேண்டியிருந்தது.

இயோ ஹியப் செங் லிமிட்டட் என்ற நிறுவனம், 1968-இல், கள்ளுக்கடைகளுக்குச் செல்லவிரும்பாத வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு தகரப்புட்டிகளில் அடைக்கப்பட்ட கள்ளை அறிமுகப்படுத்திப் பிரபலப்படுத்த முயற்சி செய்தது. தொடக்கத்தில் வரவேற்பு இருந்தபோதும் அம்முயற்சி ஓராண்டுக்குள் தோல்வியடைந்தது. சிங்கப்பூரில் இருந்த கடைசி நான்கு கள்ளுக்கடைகள் 1976வாக்கில் அன்றாடம் சுமார் 2,500 வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தன. ஒருபக்கம் கள்ளுக்கான தேவை தொடர்ந்து வீழ்ச்சியடைந்த நிலையில் மறுபக்கம் சிங்கப்பூர் கள் இறக்குவோர் சங்கத்தினர் ஊதிய உயர்வையும் பணியிடச் சூழல் மேம்பாட்டையும் வலியுறுத்தினர். 

கள்ளை வழங்கிவந்த ஒரே ஒப்பந்தக்காரரான கோவிந்தசாமி சதாசிவம், தென்னை மரங்கள் விரைந்து குறைதல், அதிகரிக்கும் சுங்கக் கட்டுப்பாடுகள், கள் இறக்குவோரின் நெருக்கடிகள் ஆகியவற்றால் 1982-ஆம் ஆண்டளவில் சிங்கப்பூரில் கள் கிடைக்காமல் போகலாம் என முன்னுரைத்தார். அவர் ஊகித்த காலத்திற்கு முன்னதாகவே, 6 நவம்பர் 1979 அன்று, அவரது 46 கள் இறக்குவோரில் 38 பேர் ஊதியம், மத்திய சேமநிதி பங்களிப்பு ஆகியவற்றில் திருப்தியின்றி வேலையைவிட்டு நின்றனர். அதையடுத்து, மறுநாள் அனைத்துக் கள்ளுக்கடைகளும் மூடப்பட்டன. கள் விற்பனைக்குப் புதிய உரிமம் வழங்குவதை நிறுத்துவதாக அரசு அறிவித்தது. 

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, 24 நவம்பர் 1979 அன்று, சிங்கப்பூரின் 'கள்ளுக் குடியர்கள்’ எழுதிய கடிதம் ஒன்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் வெளிவந்தது. குறைந்த வருமானம் கொண்ட பிரிவினருக்கான நன்மைகளை முன்னிட்டுக் கள் விற்பனையை மீண்டும் தொடங்குமாறு அக்கடிதம் வேண்டுகோள் விடுத்தது. ஆயினும், அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிங்கப்பூரில் கள் காணாமற்போனது.

சிங்கப்பூரில் 2022 முதல், "சிங்கப்பூரின் ஒரே தென்னங்கள் இறக்குமதியாளர்" எனக் கூறிக்கொள்ளும் ஹைடிரேட் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் புட்டிகளில் அடைக்கப்பட்ட கள்ளை விற்கிறது. ஷரவீன் பிரசாத், ஹேமப்ரியா ஆகிய இரு தமிழர்களால் தொடங்கப்பட்ட நிறுவனம், “வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரத்துடனும் 100% இயற்கையான தென்னங்கள்ளை வழங்குவதோடு வளங்குன்றா விவசாயத்தையும் தென்கிழக்காசிய விவசாயிகளையும் ஆதரிக்கும் நோக்குடன்” செயல்படுவதாகத் தெரிவிக்கிறது. மலாக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கள், 2.2 விழுக்காட்டு மதுத்தன்மையுடன், இணையத்திலும் தீவு முழுவதுமுள்ள பல மினிமார்ட்டுகளிலும் கள்ளுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சில இந்திய உணவகங்கள் தம் வாடிக்கையாளர்களுக்கு இதர மதுபானங்களைப் போலவே கள்ளையும் பரிமாறத் தொடங்கியுள்ளன.



மேல்விவரங்களுக்கு
Salifian Sulaiman. “Ta-ta Toddy: The Disappearance of Toddy in Singapore in the 1970s,” in Folio, edited by James Warren, 87-99. Singapore: University Scholars Programme, National University of Singapore, 2020.
Alagirisamy, Darinee. “Toddy, Race, and Urban Space in Colonial Singapore, 1900–59.” Modern Asian Studies 53, no. 5 (September 2019): 1675–1699. https://doi.org/10.1017/S0026749X1700083X 
“Toddy Pubs For Singapore?,” Sunday Standard, August 12, 1951, 3. (From Newspaper SG)
“Drunker Brawling Near Toddy Shop Scares Children,” The Singapore Free Press, 12 June 1954, 7. (From Newspaper SG)
“Gangsters move in on toddy shops,” The Straits Times, 5 March 1956, 7. (From Newspaper SG)
“Now its yam seng with canned toddy,” The Straits Times, 28 January 1968, 5. (From Newspaper SG)
“Toddy shops fight a losing battle,” New Nation, 16 June 1971, 16. (From Newspaper SG)
“Toddy can run dry in five years, he says,” New Nation, 1 November 1977, 2. (From Newspaper SG)
“Toddy days are over,” The Straits Times, 28 November 1979, 10. (From Newspaper SG)
Singaravelu, Sakti. “The toddy entrepreneur,” Tabla!, 1 May 2025. https://www.tamilmurasu.com.sg/tabla/singapore/toddy-entrepreneur

To read in English     

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.



Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA