தேங் ரோடு முருகன் கோயில் என்றும் செட்டியார் கோயில் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் 150 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்தது. சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களுள் ஒன்று.
சைவ வழிபாட்டினரான நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் முருகன் வழிபாட்டுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள். இச்சமூகத்தினர் தாங்கள் தொழில் புரியச் சென்ற இடங்களிலெல்லாம் தண்டாயுதபாணி (தெண்டாயுதபாணி என்பது மருவல்) கோயில்களை நிறுவியுள்ளனர். சிங்கப்பூரில் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசமரத்தின் கீழ் முருகனின் அடையாளமான வேல் ஒன்றை வைத்துச் செட்டியார்கள் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, 1850-களில், இப்போது ஆக்ஸ்லி ரோடு என்று வழங்கப்படும் சாலையை ஒட்டிப் பெரிய நிலப்பரப்புக்கு உரிமையாளராக இருந்த தாமஸ் ஆக்ஸ்லி என்னும் அறுவை சிகிச்சை நிபுணரிடமிருந்துதற்போது கோயில் அமைந்திருக்கும் நிலம்வாங்கப்பட்டுச், சிறு கோயில் அமைக்கப்பட்டது. கோயிலின் முதல் குடமுழுக்கு 1859-இல் நடைபெற்றது. சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் சன்னதிகள் 1878-ஆம் ஆண்டிலும் நவகிரகங்கள் உள்ளிட்ட பிற சன்னதிகள் 1936-ஆம் ஆண்டிலும் அமைக்கப்பட்டன.
கோயில் 1970-களின் பிற்பகுதியில் மீண்டும் வடிவமைக்கப்பட்டுப் புதிதாகக் கட்டப்பட்டது. புதிய தோற்றத்துடன் எழுப்பப்பட்ட கோயிலில் அலங்கார மண்டபம், நூலகம், ஊழியர் விடுதி, பல்நோக்கு மண்டபம் முதலியவை அடங்கிய மூன்றடுக்குக் கட்டடம், திருமண மண்டபம், கார் நிறுத்துமிடங்கள் எனப் பல புதிய வசதிகள் இருந்தன. ஆகச் சிறப்பாக, தென்கிழக்காசியாவின் ஆக உயரமானதாகக் கருதப்படுகின்ற 75-அடி உயர ராஜகோபுரமும் கட்டப்பட்டது. புதிய கோயிலுக்கு 1983-இல் குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்படும் பாரம்பரியத்தையொட்டி, 1996, 2009, 2023-ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. தொடக்கக்காலத்திலிருந்தே இக்கோயிலில் ஒரு நூலகம் செயல்படுகிறது.
சிங்கப்பூரில் பரவலாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா முதன்முதலில் 1860-ஆம் ஆண்டு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் நடைபெற்றது. தைப்பூசம் தவிர நவராத்திரி, திருக்கார்த்திகை, கந்தசஷ்டி முதலிய விழாக்களும் ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றன. வழிபாடுகள், விழாக்கள் மட்டுமின்றி மாணவர்களுக்குக் கல்வி உபகாரச் சம்பளம் வழங்குவது, ரத்த தான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது போன்ற சமூகப் பணிகளிலும் ஆலயம் ஈடுபட்டு வருகிறது.
ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில், வரலாற்று, பண்பாட்டுக் காரணங்களை முன்னிட்டு 2014-இல் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.
மேல்விவரங்களுக்கு
Sri Thendayuthapani Temple. Accessed 1 August 2025. https://sttemple.com/about-stt
“Sri Thendayuthapani Temple.” Roots.sg. Accessed 1 August 2025. https://www.roots.gov.sg/places/places-landing/Places/national-monuments/sri-thendayuthapani-temple
“அருள்மிகு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலின் வரலாறு.” Mediacorp செய்தி, 1 June 2023. https://seithi.mediacorp.sg/singapore/sri-thendayuthapani-temple-national-monument-history-669991
“அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் திருக்குடமுழுக்கு - கனத்த மழைக்கும் சளைக்காத பக்தி.” தமிழ் முரசு, 1 June 2023. https://www.tamilmurasu.com.sg/singapore/story20230601-130952
“வரலாற்றின் கையைப் பிடித்து வளர்ந்த கோயில்.” தமிழ் முரசு, 28 May 2023. https://www.tamilmurasu.com.sg/special-feature/story20230528-130681
“குடமுழுக்கு வேலைகள் மும்முரம்.” தமிழ் முரசு, 28 May 2023. https://www.tamilmurasu.com.sg/special-feature/story20230528-130676
ராயப்பன், சவுரியம்மாள். “டேங்க் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குட நன்னீராட்டு விழா - ஜூன் முதல் தேதி... சில விவரங்கள்.” Mediacorp செய்தி, 13 May 2023. https://seithi.mediacorp.sg/singapore/sri-thendayuthapani-temple-consecration-666456
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |