சிங்கப்பூரின் முதல் தமிழ் இதழாகக் கருதப்படும் சிங்கை வர்த்தமானி 1875-இல் தொடங்கப்பட்டது.
இதழின் பிரதிகள் எதுவும் எஞ்சாத நிலையில், அதன் சமகால வெளியீடுகளையும் அறிவிப்புகளையும்கொண்டே சிங்கை வர்த்தமானி இருந்ததை உறுதிப்படுத்தமுடிகிறது. தி சிங்கப்பூர் அப்சர்வர் 18 பிப்ரவரி 1876 அன்று ஓர் இருமொழி அறிவிப்பை வெளியிட்டது. அவ்வறிவிப்பின்படி, சி.கு. மகுதூம் சாயபு, நா.மு. முகம்மது அப்துல் காதிறுப் புலவர் ஆகிய இருவருக்கும் கூட்டுரிமைச் சொத்தாக இருந்த தீனோதய வேந்திரசாலை அச்சுக்கூடமும் சிங்கை வர்த்தமானி இதழும் பாகம் பிரிக்கப்பட்டு, 29 டிசம்பர் 1875 தேதியிட்ட முறியின்படி, அச்சுக்கூடம் சாயபுவுக்கும் இதழ் புலருக்கும் உரிமையானது தெரிகிறது (காண்க படம்).
சொத்துப் பிரிவினைக்குமுன் சாயபுவும் புலவரும் சிங்கை வர்த்தமானியின் ஆசிரியரும் வெளியீட்டாளருமாக இருந்திருக்கலாம். எத்தகைய கால இடைவெளியில் இதழ் வெளிவந்தது என்பது தெரியவில்லை. ஆயினும், சாயபு அடுத்த பத்தாண்டுகளில் ஞானசூரியன், சிங்கை நேசன் உள்ளிட்ட வார இதழ்களை வெளியிட்டதால் சிங்கை வர்த்தமானியும் வார இதழாக இருந்திருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு.
மேலே குறிப்பிடப்பட்ட இருமொழி அறிவிப்பு வெளியாகிச் சுமார் நான்கு மாதம் கழித்து, 18 ஜூன் 1876 அன்று, தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் வெளிவந்த ஒரு செய்தி (கீழே காண்க) சிங்கை வர்த்தமானியின் ‘புதிய தொடரின் முதல் இதழ்’ 3 ஜூன் 1876 அன்று வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தது. குறும் தலையங்கங்கள், வாராந்திர விலைவாசி, நாணயமாற்று விகிதம் உள்ளிட்ட பகுதிகளுடன் நேர்த்தியாக அச்சிடப்பட்டிருந்ததாகவும் விவரித்தது. புலவருக்குச் சொந்தமான பிறகு வெளிவந்த சிங்கை வர்த்தமானியைப் ‘புதிய தொடர்'என அச்செய்தி குறிப்பிட்டுள்ளது. அதன் ஆசிரியராகப் புலவரே இருந்தாரா என்பது தெரியவில்லை.
நீரிணைக் குடியிருப்புப் பள்ளிகளின் முதல் மேலாளராக 1872-இலிருந்து பணியாற்றிய ஏ.எம். ஸ்கின்னர், தமது 1876-ஆம் ஆண்டுக் கல்வி அறிக்கையில், “சிங்கப்பூரில் ஒரு வழியாக உள்ளூர் மொழிகளில் இதழ்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஒரு தமிழ் செய்தித்தாள் முதன்முதலில் கடந்த ஆண்டின் மத்தியில் நிறுவப்பட்டது, ஆனால் அது விட்டுவிட்டு வெளிவந்ததோடு பூசல் வளர்க்கும் கடிதங்களையும் வெளியிட்டது. விரைவில் நின்றுபோனது” என்று குறிப்பிட்டிருந்தார். அது சிங்கை வர்த்தமானியைக் குறித்தது எனில், 1875-இன் நடுப்பகுதிக்கும் 1876-இன் பிற்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இதழ் வெளிவந்திருக்கலாம். சிங்கை வர்த்தமானி நின்றுபோன தேதி தெரியவில்லை.
மேல்விவரங்களுக்கு
Baskaran, Bala. Tamil Journalism in Singapore and Malaya (1875-1941) Filling Up the Gap. Unpublished Manuscript
Wong, Francis Hoy Kee. Official Reports on Education: Straits Settlements and the Federated Malay States, 1870–1939. Singapore: Pan Pacific Book Distributors, 1980
“Page 2 Advertisements Column 1,” Straits Observer, 18 February 1876, 2. (From Newspaper SG)
“Friday, 9th June,” The Straits Times, 10 June 1876, 3. (From Newspaper SG)
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |