தமிழ் மொழி விழா 2007-இல் பேச்சுத் தமிழை மேம்படுத்தும் நோக்கத்துடன் இருவார நிகழ்வாகத் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து, விழா ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும் ஒருமாதத் திருவிழாவாக மாறியுள்ளது. வளர்தமிழ் இயக்கத்தின் தலைமையில் 45-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளுடன் இலக்கியம், சொற்பொழிவு, கலை, பண்பாட்டு நிகழ்வுகளின் தொகுப்பாக அந்த விழா நடைபெற்று வருகிறது. இளையர்களை இலக்காகக் கொண்டு, ‘தமிழ் இளையர் விழா’ என்னும் மற்றொரு விழாவும் 2021-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ் மொழி விழாவின் முன்னோடியாகத் ‘தமிழ் மொழி வாரம்’ என்னும் விழா, 1995-இல் தொடங்கப்பட்டது. ஈராண்டுகளுக்கு ஒருமுறை ஏப்ரல் மாதத்தில் நடத்துவதாகத் தொடங்கிய அவ்விழாவிற்கு, பல சமூக அமைப்புகளின் ஆதரவோடு, இளம் தலைமுறையினரிடையே தமிழ் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிப்பதே முதன்மை நோக்கமாக இருந்தது. முதல் தமிழ் மொழி வாரம் 11 பேர் கொண்ட குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் தலைவராக நிருமலன் பிள்ளை இருந்தார். அவ்விழா, 1997-இல் இரண்டாம் முறை நடைபெற்றபோது, மற்ற நிகழ்வுகளுடன், ஒரு சொற்களஞ்சியம் வெளியிடப்பட்டது. உள்ளூர்ச் சூழலில் மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய தற்காலத் தமிழ்ச் சொற்கள் அடங்கிய அச்சொற்களஞ்சியத்தின் சுமார் 10,000 பிரதிகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. அதே விழாவில், அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எஸ். ஈஸ்வரன், ‘தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்’ என்ற முழக்கத்துடன் கூடிய 50,000 ட்ரான்ஸிட் லிங்க் எம்.ஆர்.டி. அட்டைகளை வெளியிட்டார்.
ஈராண்டுகள் கழித்து, 12 மே 1999 அன்று, அப்போதைய சட்ட, வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த எஸ். ஜெயக்குமார், ‘தமிழ் மொழி இயக்கம்’ தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். பின்னர் 24 ஏப்ரல் 2000 அன்று அப்போதைய தகவல், தொடர்பு, கலை அமைச்சின் கீழ் ‘வளர்தமிழ் இயக்கம்’ என்னும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. ஈஸ்வரன் ஆலோசகராகவும் வை. திரு. அரசு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்கள். சிங்கப்பூரில் உள்ள தமிழ் பேசும் சமூகத்தினருள் தமிழ்மொழி பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்தல், தமிழ் மொழிப் பயன்பாட்டை அதிகரித்தல், சிங்கப்பூர்த் தமிழ் இளையர்களை ஈடுபடுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்துதல் ஆகியவை இயக்கத்தின் முதன்மை நோக்கங்கள். வளர்தமிழ் இயக்கம், 2006-இல், சிறார், இளையர்களிடையே பேச்சுத் தமிழை ஊக்குவிக்கும் ஆக்கப்பூர்வமான நிகழ்வுகளை உருவாக்கச் சமூகத்திலிருந்து யோசனைகளை வரவேற்றது. அந்த முயற்சி தமிழ் மொழி விழாவிற்கு அடித்தளம் அமைத்தது. விழா மறு ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. தமிழ் மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவுடன் இணைந்து வளர்தமிழ் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த விழா, 2007-ஆம் ஆண்டு மார்ச் 31 முதல் ஏப்ரல் 15 வரை நீடித்தது. துவக்க நிகழ்வு ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி வளாகத்தில், அப்போது வர்த்தக, தொழில் அமைச்சராக இருந்த ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்குகள், கேளிக்கைவிழா ஆகியவற்றோடு உயர்கல்வி மாணவர்களுக்கான நாடகப் போட்டியின் இறுதிச் சுற்றும் விழாவில் இடம் பெற்றன.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், தேசிய நூலக வாரியம், மக்கள் கழக இந்தியர் நற்பணிப் பேரவை, ரவீந்திரன் நாடகக் குழு, சிங்கைத் தமிழ்ச் சங்கம், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் ஆகியவை 2007-ஆம் ஆண்டின் தமிழ் மொழி விழாவில் பங்காளி அமைப்புகளாகக் கலந்து கொண்டன. பங்காளி அமைப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 45-க்கும் மேலாகப் பெருகியது. அவற்றுள் பெரும்பாலானவை சமூக அமைப்புகளாக இருந்தபோதிலும், அரசாங்க அமைப்புகளும் கல்வி அமைப்புகளும் இணைந்திருந்தன.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், குறிப்பாக 2020-இல், தமிழ் மொழி விழா சரிவைச் சந்தித்தது. ஆறு மாதங்களுக்கும்மேல் ஒத்திவைக்கப்பட்ட விழாவில் சுமார் 25 நிகழ்வுகள் மட்டும், நவம்பர் 28 முதல் டிசம்பர் 20 வரை, முற்றிலும் இணையத்திலேயே நடத்தப்பட்டன. கிருமிப்பரவல் காலத்திலிருந்து மீண்ட பிறகு, 2023, 2024-ஆம் ஆண்டுகளில், தமிழ் மொழி விழாவில் கலந்துகொண்டோரின் எண்ணிக்கை வலுவான மீட்டெழுச்சி கண்டு கிருமிப்பரவலுக்கு முந்தைய அளவைத் தாண்டியது. குடும்பம், பள்ளி, சமூகம் எனப் பல தளங்களில் தன் ஈடுபாட்டைத் தீவிரப்படுத்தத் தமிழ் மொழி விழா உறுதிபூண்டுள்ளது.
மேல்விவரங்களுக்கு
"Tamil language weeks to get boost with fund.” The Straits Times, 30 May 1995, 26. (From Newspaper SG)
“They love Tamil, as excellent response shows.” The Straits Times, 11 April 1997, 15. (From Newspaper SG)
“Celebrating 10 Years of the Tamil Language Festival in Singapore.” Tamil Language Council, 27 March 2016. https://www.nas.gov.sg/archivesonline/data/pdfdoc/20160324007.htm
Menon, Malavika. “Tamil Language Festival set to run virtually till Dec 20,” The Straits Times, 27 November 2020. https://www.straitstimes.com/singapore/tamil-language-festival-set-to-run-virtually-till-dec-20 Chin Soo Fang “Passion for Tamil: Language festival seeks to get youth to embrace mother tongue,” The Straits Times, 14 March 2023. https://www.straitstimes.com/singapore/love-tamil-speak-tamil-language-festival-seeks-to-get-youth-to-embrace-mother-tongue
“About the Tamil Language Council.” Tamil Language Council. Accessed on 1 August 2025. https://www.languagecouncils.sg/tamil/en/about/about-the-tamil-language-council
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |