சுசீலன் வாசு (பி. 1941), கல்வியாளராகவும் அரசியல்வாதியாகவும் இருந்ததோடு சமூக சேவைத் துறையில் முக்கியமான சேவைகளைத் தொடங்குவதில் முன்னோடியாகவும் விளங்கினார். நாடாளுமன்ற உறுப்பினராக 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். அவர் ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளையும் பேசக்கூடியவர்.
இந்தியத் தந்தைக்கும் சீனத் தாய்க்கும் பிறந்த வாசு, 1959-இல் தமது உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்தார். அதனைத் தொடர்ந்து மலேசியாவின் குளுவாங்கில் உள்ள ரப்பர்த் தோட்டத் தொழிற்சாலையில் பயில்நிலை மேற்பார்வையாளராகத் தனது பணிவாழ்க்கையைத் தொடங்கினார். மூவாண்டிற்குப் பின்னர், அவர் சிங்கப்பூர் உட்பிரிட்ஜ் மருத்துவமனையில் மனநலத் தாதியாகச் சேர்ந்தார். பிறகு, 1967-இல், சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத்தில் (தற்போது சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம்) சேர்ந்து, ஈராண்டில் சமூகவியல் துறையில் சிறப்புப் பட்டயம் பெற்றார். பின்னர், ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் சமூகப்பணித் துறையில் 1976-இல் முதுகலைப் பட்டமும் 1986-இல் முனைவர் பட்டமும் பெற்றார்.
வாசு, 1971-ஆம் ஆண்டு சிங்கப்பூர்ச் சமூக ஊழியர்கள் சங்கத்தின் முதல் தலைவரானார். அதனைத் தொடர்ந்து, 1973 முதல் 1979 வரை, சிங்கப்பூர்ச் சமூக சேவை மன்றத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். அக்காலக்கட்டத்தில், அவர் ஹெண்டர்சன் மூத்தோர் சமூக இல்லத்தைத் தொடங்கினார். அது வயதானவர்களுக்கான முதல் சமூக இல்லமாகும். அதுவே அடுத்தடுத்து அமைக்கப்பட்ட இல்லங்களுக்கு முன்மாதிரியானது. அதேபோன்று, இன்றைய குடும்ப சேவை நிலையங்களாக விளங்கும் பல அமைப்புகளுக்கும், அவர் 1976-இல், அங் மோ கியோ சமூக சேவை நிலையத்தைத் தொடங்குவதற்காக மேற்கொண்ட முன்னோடி முயற்சியே அடிப்படை. அதே ஆண்டில், முதல் தொண்டூழியச் சேவை மையத்தை நிறுவினார். தேசியத் தொண்டூழியர், கொடையாண்மை மையத்தை உருவாக்க அது வழிவகுத்தது. அவர் 1984 முதல் 1986 வரை தேசியச் சமூக சேவை மன்றம், சமூக உண்டியல் ஆகியவற்றின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
அடுத்து, 1979-இலிருந்து சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத்தில் சமூகப் பணித் துறையில் விரிவுரையாளராகத் தம் கல்விப் பணியைத் தொடர்ந்தார். பல்கலைக்கழகம் அவரை 1987-இல் மூத்த விரிவுரையாளராகவும் 1998-இல் இணைப் பேராசிரியராகவும் நியமித்தது.
வாசு 1984 பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி வேட்பாளராகக் களமிறங்கினார். போ வென் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்துவந்த 1988 பொதுத் தேர்தலில், அவர் தியோங் பாரு குழுத்தொகுதியில் போட்டியிட்டார். இந்திய-சீனப் பெற்றோருக்குப் பிறந்த வாசு, தமது தந்தைவழி இன அடையாளத்தின் காரணமாக இந்திய இனத்தவராகக் கருதப்பட்டார். பின்னர் 1991 பொதுத் தேர்தலில், தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் ராடின் மாஸ் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பத்தாண்டுகள் கழித்து, 2001-இல் பதவி விலகினார். பின்னர் அவர் அங் மோ கியோ குழுத்தொகுதியின் கெளரவ ஆலோசகராகச் சேவை செய்தார். மேலும், ‘துடிப்போடு மூப்படைதல்’ முயற்சிகளை ஊக்குவித்தார். கல்வித்துறையில், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் 2002-இல் இணைப் பேராசிரியர்நிலை ஆய்வாளராகவும் 2020-இல், ஓய்வுபெற்ற கௌரவப் பேராசிரியராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
சமூக சேவைத் துறையில் அவர்தம் பங்களிப்பிற்காகப் பல விருதுகள் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டார். ஆல்கின் சிங்கப்பூர் (Allkin Singapore) என்னும் அமைப்பின் வாழ்நாள் தொண்டூழியர் விருதை 2023-இல் பெற்றார். அடுத்த ஆண்டு, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சிடமிருந்து தலைசிறந்த வாழ்நாள் தொண்டூழியர் விருதைப் பெற்றார். அப்போது அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி, வாசு ‘சமூகப் பணியின் தந்தை’ எனப் பாராட்டப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.
மேல்விவரங்களுக்கு
Vasoo, Sushilan (Dr). Oral history interview by Claire Yeo, 31 August 2009. Transcript and MP3 audio, 12:27:49. National Archives of Singapore (accession no. 003410)
“Champion for the poor.” The Straits Times, 29 July 1990, 23. (From Newspaper SG)
“Multi- lingual man of the people.” The Straits Times, 10 April 1984, 9. (From Newspaper SG)
“Our Advisors.” Ace Seniors. Accessed 1 August 2025. https://www.aceseniors.org/copy-of-our-profile-1
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |