நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் தமிழ்நாட்டின் செட்டிநாட்டு வட்டாரத்தைச் சேர்ந்த தமிழ்ச் சமூகத்தின் ஒரு சாதியினர். இவர்கள் நகரத்தார் என்றும் செட்டி என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் 1820-கள் முதல் சிங்கப்பூரின் தொடக்கக்கால நிதியாளர்களாகச் செயல்பட்டனர். இவர்களுடைய மூலதனம், இயற்கை வளங்கள், சொத்து, கப்பல் போக்குவரத்து, சில்லறை வியாபாரம் முதலிய பல்வேறு துறைகளில் சிங்கப்பூரின் நிதித்தேவைகளை நிறைவு செய்தது. எல்லா நிதித்தேவைகளையும் ஒரே இடத்தில் நிறைவு செய்யக்கூடிய மையமாகச் செட்டியார் நிறுவனங்கள் இருந்தன. செட்டியார்கள் நூறு வெள்ளிக்கும் குறைந்த தொகையிலிருந்து பல நூறாயிரம் வெள்ளிவரை கடன் கொடுக்கும் போக்கைக்கொண்டிருந்தனர். சிறிய தொகைகளை  ஈடு இல்லாமல் நீக்குப்போக்குடன் கடன் கொடுத்தனர். பெரிய கடன்களைப் பொறுத்தவரை வாராக்கடனால் தனிநிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்பைப் பகிர்ந்துகொள்ளக் கூட்டணி அமைத்துக்கொண்டனர். இந்த அணுகுமுறை, தங்கள் தொழில் வளர்ச்சியின் எல்லாக் கட்டங்களிலும் நிதிபெற்ற வாடிக்கையாளர்களுடன் நீடித்த, நம்பகமான உறவுக்கு வழிவகுத்தது. 

செட்டியார்கள் 10, 11-ஆம் நூற்றாண்டிலேயே இவ்வட்டார அளவில் வணிகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவர்கள் சோழப் பேரரசின்கீழ்த் தென்கிழக்காசியாவில் வர்த்தகம் செய்ய அரசதிகாரம் பெற்றிருந்தனர். அவர்களின் வணிகப் பொருள்களில் வைரம், முத்து முதலிய விலையுயர்ந்த ஆபரணக் கற்கள் முதல் உப்பு, அரிசி, துணிமணிகள் முதலிய அடிப்படைப் பொருள்கள் வரை இருந்தன. 19-ஆம் நூற்றாண்டில், சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பே அவர்கள், துரிதமாக வளர்ந்து வந்த மலாயாவில் இருந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு பினாங்கிலும் மலாக்காவிலும் தொழில்புரிந்தனர். காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய வங்கிகள் பொதுவாக ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் சில சமயங்களில் வசதியுள்ள ஆசியர்களுக்கும் மட்டுமே கடன் கொடுத்தன. செட்டியார்கள் இந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு, சீன வர்த்தகர்கள், ஐரோப்பியத் தோட்ட முதலாளிகள், மலாய் அரச குடும்பத்தினர், யுரேஷிய அரசாங்க அதிகாரிகள், இந்திய வர்த்தகர்கள் முதலியவர்களுக்குக் கடன் கொடுத்தனர். முதல் சீன வங்கியான க்வோங் யிக் வங்கி 1903-இல் நிறுவப்பட்ட பின்னரும், இந்த வங்கிகள் பொதுவாகத் தங்கள் குலமரபுக் குழுவினருக்கும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் மட்டுமே அதிகம் கடன் கொடுத்ததால், உள்ளூர்வாசிகள் பலருக்குக் கடன் கிடைப்பது சிரமமாக இருந்தது. புதிதாகத் தொழில் தொடங்கியவர்களுக்குக் கடன் கிடைப்பது அதைவிட அரிதாக இருந்தது. ஆனால், செட்டியார்கள் உயர்வு தாழ்வு பார்க்காமல், எல்லா உள்ளூர்க்காரர்களுக்கும் கடன் கொடுத்தனர். 

செட்டியார் சமூகத்தில் தொழில் ஆர்வம் இளமையிலிருந்தே ஊட்டப்பட்டது. செட்டியார் பையன்கள் பத்து வயதில் சிங்கப்பூருக்கு வந்து 12 ஆண்டுகள்வரை செட்டியார் நிறுவனங்களில் மனக்கணக்கு, கணக்கெழுதுதல் உட்பட பல்வேறு பயிற்சிகளைப் பெற்றனர். தங்கள் குடும்பத்தை விட்டு இங்கு வந்த செட்டியார்கள் மூன்றாண்டுகள் பணியாற்றிய பிறகு, ஓர் ஆண்டு விடுப்பில் சொந்த ஊருக்குச் சென்றுவந்தனர். பண வசதி இருந்தபோதும், அவர்கள் சிக்கன வாழ்க்கையே வாழ்ந்தனர். பெரும்பான்மையான செட்டியார்கள், மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைந்திருந்த மார்க்கெட் ஸ்ட்ரீட் கடைவீடுகளில் குடியேறினர். கூட்டுறவு அமைப்புகள் போன்ற இவை கிட்டங்கிகள் என்றழைக்கப்பட்டன. இந்தக் கிட்டங்கிகள், பகலில் அலுவலகமாகவும் இரவில் உறைவிடமாகவும் பயன்படுத்தப்பட்டன. கிட்டங்கிகள், மூன்று வேளை உணவு, துப்புரவுச் சேவை, சலவைச் சேவை, முடிதிருத்தும் சேவை எனப் பல்வேறு சேவைகளை, கட்டுப்படியான கட்டணங்களில் இருக்குமிடத்திலேயே வழங்கின. பொதுவாக, ஒரு கிட்டங்கியில் இரு தளங்களில் 30 முதல் 40 செட்டியார் நிறுவனங்கள்வரை இருந்தன.  

செட்டியார்களின் தொழில் நலன்களைப் பேணவும் அவர்களைப் பிரதிநிதிக்கவும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வர்த்தக சங்கம் 1931-இல் நிறுவப்பட்டது. செட்டியார்கள் தென்கிழக்காசியாவில் இருந்த மற்றச் செட்டியார் நிறுவனங்களுடன் விரிவான தொடர்புகளை வைத்திருந்ததால் அக்காலத்தில் அவர்களால் பன்னாட்டுப் பணப்பரிமாற்றச் சேவை வழங்க முடிந்தது. சிங்கப்பூரில் 1950-களில் ஏறக்குறைய 200 செட்டியார் நிறுவனங்கள் இருந்தன. காலனித்துவ காலத்தில் அவர்களுடைய செல்வத்திற்கும் செல்வாக்கிற்கும் 1937-இல் ஆறாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டுக்காக அமைக்கப்பட்ட சிங்கப்பூர் முடிசூட்டு விழாக் குழுவினால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று சான்று பகர்கிறது. வாண வேடிக்கைகளுக்கு நிதி நாடும் அக்கடிதம், “இந்தக் காலனியில் உள்ள பல்வேறு சமுகங்களுள் மிகுந்த செல்வம் படைத்த சமூகங்களில் ஒன்றாக விளங்குவதால், எல்லா முக்கியக் கொண்டாட்டங்களிலும் அவர்களுடைய ஒத்துழைப்பை நாடுவது ஏறக்குறைய ஒரு வழமையாகிவிட்டது” எனக் கூறுகிறது. செட்டியார்கள், இரண்டாம் உலகப் போரின்போது, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸால் சிங்கப்பூரில் நிறுவப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு ஆகப் பெரிய நன்கொடையாளர்களாக விளங்கினர். 

அவர்களுடைய கொடை பரந்துபட்டதாக இருந்தது. இந்தியாவில் நூற்றுக்கணக்கான கோயில்களைக் கட்டியும் புதுப்பித்தும் புகழ்பெற்றிருந்த அவர்கள் அந்தப் பாரம்பரியத்தை இலங்கை, தென்கிழக்காசியா எனத் தாங்கள் புலம்பெயர்ந்த இடங்களிலெல்லாம் தொடர்ந்தனர். சிங்கப்பூரில் அவர்களுடைய கொடையில் இரு கோயில்கள் உருவாகி வளர்ந்திருக்கின்றன. அவை, டேங்க் ரோட்டில் உள்ள ஶ்ரீ தெண்டாயுதபாணி கோயிலும் (செட்டியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) சைனா டவுனிலுள்ள ஶ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயிலும் ஆகும். சிங்கப்பூரில் பெரிய அளவில் கொண்டாடப்படும் தைப்பூச விழா 1850-கள் வாக்கில் இங்குச் செட்டியார்களால் தொடங்கப்பட்ட ஒன்று. அவர்கள் 1940-களில் தங்கள் கோயிலில் நவராத்திரி விழாவை அறிமுகப்படுத்தனர். இது ஒன்பது நாள் கலை விழாவாக உருவெடுத்தது. செட்டியார்கள் கல்விக்கும் ஆதரவளித்தனர். அவர்கள் சிங்கப்பூரில் தொடக்கக்கால இலவசத் தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றான தண்டாயுதபாணி பள்ளியை நிறுவினர். போருக்கு முன் அவர்கள் ஆர்ச்சர்ட் ரோட்டில் செட்டியார்களின் முதன்மைக் கல்விக்கழகம் என்னும் தனியார் ஆங்கிலவழிப் பள்ளியையும்கூட நடத்தினர். இரு பள்ளிகளுமே இப்போது இல்லை. செட்டியார்கள் சிங்கப்பூரில் மற்றப் பல தமிழ்ப் பள்ளிகளுக்கும் ஆதரவளித்தனர். மலாயாப் பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் தோற்றுவிக்கப்பட்டபோது அதற்குக் கணிசமான நன்கொடை அளித்தனர். 

செட்டியார்கள் சிங்கப்பூரில் மிகப்பெரிய சொத்துடைமையாளர்களாகவும் தோட்ட முதலாளிகளாகவும் விளங்கினர். பல சாலைகளுக்கு அவர்களுடைய பெயர்கள் சூட்டப்பட்டன – மெய்யப்ப செட்டியார் ரோடு, அண்ணாமலை அவென்யூ, அருணாசலம் செட்டி ரோடு, முத்துராமன் செட்டி ரோடு, நாராயணன் செட்டி ரோடு. காலப்போக்கில் இவற்றுள் சில மாறிவிட்டன. செட்டியார் பங்களிப்புகள் வரலாற்று ஏடுகளிலும் மரபுடைமைக் கழகங்களிலும் இடம்பெற்றிருந்தாலும் சிங்கப்பூரின் இன்றைய செட்டியார் சமூகம் ஒரு முன்னணி வணிகச் சமூகமாக விளங்கவில்லை. 1970-கள் முதல், சிங்கப்பூர்ச் செட்டியார்கள், அவர்களுக்கேயுரிய தொழில்முனைப்புப் பண்புகளைத் தவிர்த்துவிட்டு, நிபுணத்துவத் தொழில், தொழில்நுட்பம், அறிவுசார் பணிகள் முதலியவற்றுக்கு மாறினர். குறிப்பிடத்தக்க மற்றொரு மாற்றம், சிங்கப்பூரில் கிட்டங்கி சாராத செட்டியார்களின் எண்ணிக்கையும் மனைவி, பிள்ளைகளுடன் குடும்பமாகக் குடியேறுவதும் அதிகரித்ததாகும். 1960-களில் சுமார் 30 ஆக மதிப்பிடப்பட்ட செட்டியார் குடும்பங்களின் எண்ணிக்கை 2020-இல் சுமார் 1,000 ஆக உயர்ந்திருந்தது.



மேல்விவரங்களுக்கு
Chettiars’ Temple Society Singapore. “Sri Layan Sithi Vinayagar Temple - Sri Thendayuthapani Temple,” Accessed 14 May 2025. https://sttemple.com
Chettiars’ Temple Society Singapore. “Chettiars’ Temple Society Digital Library,” Accessed 14 May 2025. http://www.sttemplelibrary.com/
Genealogy Society Singapore. “Chettiars: The Pioneer Financiers of Singapore,” 22 October, 2022. https://www.youtube.com/watch?v=kc652EvA2Xc
Nishimura, Yuko, and Padmini Swaminathan. Gender, Kinship and Property Rights: Nagarattar Womanhood in South India. Contributions to Indian Sociology, 2000.
Rudner, David West. Caste and Capitalism in Colonial India: The Nattukottai Chettiars. California: University of California Press, 2022. 
S Muthiah, Meyyappan, Meenakshi and Ramasamy, Visalaksi. The Chettiar Heritage - The Complete Book. India: The Chettiar Heritage, 2000. 
Suppiah, Ummadevi. The Chettiar Role in Malaysia’s Economic History, edited by Raja, Sivachandralingam Sundaram. Kuala Lumpur: University of Malaya Press, 2016.
சிங்கப்பூர் செட்டியார் கோயில் சங்கம். “செட்டியார்கள் ஆலய குழுமம் மின் நூலகம்.” Accessed 14 May 2025. http://www.sttemplelibrary.com/. 

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA