தமிழகச் சமூகக் கட்டமைப்பில் ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதி அமைப்பு, பிறப்பின் அடிப்படையிலான படிநிலைகளையும் அடையாளத்தையும் வரையறுக்கும் ஒன்றாக நெடுங்காலமாக நீடித்துவருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்தவர்களால் சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்ட சாதி அமைப்பு, தொடக்கத்தில், தாயகத்தில் காணப்பட்ட இறுக்கமான அடுக்குகளையும் தெளிவாக வரையறுக்கப்பட்ட தொழில்பிரிவுகளையும் கொண்டிருந்தது. இருப்பினும், காலப்போக்கில், சீர்திருத்த இயக்கங்களின் முன்னெடுப்புகள், ஜப்பானிய ஆக்கிரமிப்பின் தாக்கம், சிங்கப்பூர் தனிநாடாக ஆனபின் நிகழ்ந்த சமுதாய-பொருளாதார முன்னேற்றங்கள் ஆகியவற்றின் காரணமாகச் சாதி அமைப்பு பெரும் மாற்றங்களுக்கு உள்ளானது. நவீன சிங்கப்பூரில் சாதி வேற்றுமைகள் குறைந்துவிட்டாலும் அவற்றின் எச்சங்கள் தொடர்ந்து பண்பாட்டு அசைவுகளிலும் அடையாளங்களிலும் நுட்பமாக வெளிப்படுகின்றன.
சாதி அமைப்பு பண்டைக்காலத்தில் தொழில் அடிப்படையிலான பிரிவுகளாகவும் சாதி மாற்றங்கள் இயல்பாக நடக்கக்கூடியதாகவும் இருந்ததாகக் கருதப்படுகிறது. ஆயினும், பிற்காலச் சாதி அமைப்பு கெடுபிடிமிக்க கட்டமைப்பாக மாறிப்போனது. மேல்சாதி-கீழ்ச்சாதி வேறுபாடுகள், சாதி சார்ந்த திருமணங்கள், சாதிப் பாரம்பரியங்கள் என அக்கட்டமைப்பு நெகிழ்வோ உறவாடல்களோ இன்றி இறுகிப் போனது. பிறப்பின் அடிப்படையிலேயே சாதி நிர்ணயிக்கப்பட்டது.
தமிழ்ச் சமூகத்தில் ஆயிரக்கணக்கான சாதிகளும் அவற்றின் உட்பிரிவுகளும் உள்ளன. அத்தகைய அடையாளங்களில் பலவும் 19-ஆம் நூற்றாண்டில் இயல்பாகவே சிங்கப்பூருக்கும் கொண்டுவரப்பட்டன. எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரின் முதல் குடியேறிகளுள் ஒருவராகக் கருதப்படும் நாராயண பிள்ளை, 'பிள்ளை' சாதியைச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம். அக்காலக்கட்டத்தில் பல சாதிகளைச் சேர்ந்த ஆண்கள் தங்கள் சாதிப் பெயரைக் குடும்பப் பெயராகத் தம் பெயருக்குப்பின் சேர்த்துக்கொள்வது வழக்கமாக இருந்தது. அவ்வழக்கம், 20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரையான காலக்கட்டத்தில் படிப்படியாகத் தேய்ந்து மறைந்தது.
தொடக்கக்காலச் சிங்கப்பூரில், சமூகக் கலந்துறவாடல்களில் பின்பற்றப்பட்ட தீண்டாமையும் பிரிவினைகளும், குடியேறியவர்களின் பூர்விக கிராமங்களின் நடைமுறைகளை ஒத்திருந்தன. இரண்டாம் உலகப் போருக்குமுன், கீழ்ச் சாதியாகக் கருதப்பட்ட ஆதிதிராவிடர்கள் கோவில்களுக்குள் நுழைவதற்கும் காப்பிக் கடைகளிலும் கள்ளுக் கடைகளிலும் பொதுவான பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கும் இருந்த தடைகளைப் பல ஆவணங்கள் பதிவுசெய்துள்ளன. மேலும், தலையில் முண்டாசு, காலில் செருப்பு ஆகியவற்றை உயர்சாதிகளாகக் கருதப்பட்டோர் முன் அணிந்து நடக்க ஆதிதிராவிடர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்தியாவில் சாதி என்பது பாரம்பரியத் தொழில்களுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்ததால், சிங்கப்பூரிலும் தொடக்கக்காலத்தில் அதேபோக்கு பெருமளவில் தொடர்ந்தது. எடுத்துக்காட்டாக, கம்மாளர்கள் தச்சர்களாகவும் பொற்கொல்லர்களாகவும் வேலை செய்தனர். செட்டியார்கள் நிதியாளர்களாகவும் வெள்ளாளர்கள் செட்டியார்களிடம் கணக்குப் பிள்ளைகளாகவும் பணியாற்றினர். கோனார்களும் கவுண்டர்களும் கால்நடை வளர்ப்பு, மாட்டுவண்டித் தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டனர். வண்ணார் சலவைத் தொழிலில் ஈடுபட்டனர்.
அன்றைய காலனித்துவ அரசாங்கத்தின் நகரமன்ற வேலைகளிலும்கூட, அனைத்து இந்தியத் தொழிலாளர்களும் பொதுவாகக் 'கூலிகளாகப்’ பார்க்கப்பட்டபோதும் அவர்களுக்குள் அதிகாரப்பூர்வமற்ற பிரிவுகள் நீடித்தன. எடுத்துக்காட்டாக, ஆதிதிராவிடர்கள் கழிவகற்றல், துப்புரவு வேலைகளில் ஈடுபட்டபோது அதே சுகாதாரப் பிரிவிலிருந்த இதர சாதியினர் மலேரியா எதிர்ப்பு மருந்து தெளிக்கவும் கம்பிவடங்கள் பொருத்தவும் பயன்படுத்தப்பட்டனர் என்று ஓர் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் அல்லாதோர், பெரும்பாலும் தங்கள் பூர்விக கிராமங்களில் ஆதிதிராவிடர் செய்துவந்த தொழில்களைச் சிங்கப்பூரில் தவிர்க்க முயன்றனர்.
இந்தியர்கள் வாழ்ந்த பகுதிகள் பலவும் ஆதிதிராவிடர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களைக் கொண்டிருந்தன. எடுத்துக்காட்டாக, ஜாலான் புசாருக்கும் ரோச்சோர் கெனாலுக்கும் இடையிலான பகுதியைக் குறிப்பிடலாம். ஏறக்குறைய 1970-களின் பிற்பகுதிவரை, ஜாலான் புசாரிலிருந்த லோரோங் லாலாட் சந்து ‘பறைத்தெரு’ என்று அழைக்கப்பட்டதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பள்ளர், சக்கிலியர் முதலிய சாதிகளை உள்ளிட்ட ஆதிதிராவிடச் சமூகங்களில் ஒன்று பறையர். சிராங்கூன் ரோட்டிலும் அதை ஒட்டிய சாலைகளிலும் இதர சாதியினர் குடியேறினர். அதேபோல, தஞ்சோங் பகார் பகுதியிலுள்ள ஆன்சன் ரோட்டின் ஒரு பக்கத்தில் ஆதிதிராவிடர்களும் மறுபக்கத்தில் கவுண்டர்களும் குடியேறினர்.
தமிழர் சீர்திருத்தச் சங்கம் போன்ற சீர்திருத்த அமைப்புகள் 1930-களிலும் ஜப்பானியர் ஆக்கிரமிப்புக்கால அனுபவங்கள் 1940-களிலும் சிங்கப்பூர்த் தமிழரிடையே சாதி குறித்த மனப்பாங்கில் மாற்றங்களை ஏற்படுத்தின. பெரும்பாலும் பிராமணர்களே திருமணங்களை நடத்திவைத்துக்கொண்டிருந்த அக்காலத்தில், சீர்திருத்த இயக்கங்கள் உயர்சாதியினராகக் கருதப்படும் பிராமணர்களை விலக்கும் திருமணங்களையும் சாதிகள், இனங்களுக்கு இடையிலான கலப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தன. தமிழர் சீர்திருத்தச் சங்கம், கண்ணியத்தையும் சுயமரியாதையையும் வேண்டுவோர் சாதியை நிராகரிக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. கோ. சாரங்கபாணி, அ.சி. சுப்பய்யா போன்ற சமூகத் தலைவர்கள், அக்காலத்தின் பொதுவான போக்கை மீறி, தங்கள் சாதியைக் குடும்பப்பெயராகப் பயன்படுத்துவதைத் தவிர்த்தனர். சாரங்கபாணி, சாதிக்குள் நிகழும் திருமணத்திற்கு எதிரான தனது பேச்சைச் செயலிலும் காட்டும் விதமாக, 1937-இல் ஒரு சீனப் பெரனாக்கான் பெண்ணை மணந்தார்.
ஜப்பானியர், 1942-45 காலக்கட்டத்தில் சிங்கப்பூரை ஆக்கிரமித்தபோது, தமிழ்ச் சமூகமும் மற்றவர்களைப் போலவே கடுமையான இன்னல்களை அனுபவித்தது. சாதி வேறுபாடின்றி வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் தள்ளப்பட்டது. எடுத்துக்காட்டாக, போருக்கு முன்பு, பொதுவாக, உணவு இடைவேளையின்போது ஒரே சாதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்றுகூடி உண்பர். ஆனால், ஜப்பானியர் அனைவரையும் எந்த வேறுபாடுமின்றி ஒரே வரிசையிலோ ஒரே குழுவாகவோ அமரவைத்தனர். கீழ்ப்படியாதவர்களைக் கடுமையாக தண்டித்தனர். இத்தகைய அன்றாட அனுபவங்கள் மூன்றரை ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது சாதி அமைப்பைப் படிப்படியாக பலவீனப்படுத்தியதாக நம்பப்படுகிறது. மேலும், போருக்குப் பிறகு, சிங்கப்பூரின் கோவில்கள் அனைத்து சாதியினருக்கும் தம் கதவுகளைத் திறந்துவிட்டன. தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில்கூட அத்தகைய போக்கு அப்போது பரவலாகக் காணப்படவில்லை.
போருக்குப் பிறகு, சாதிப்பாகுபாடு கணிசமாகக் குறைந்த அதேவேளையில், சாதி சார்ந்த அமைப்புகள் தலையெடுத்தன. ஏறக்குறைய 1940களின் பிற்பகுதியிலிருந்து 1960-களின் முற்பகுதி வரை குறைந்தது 10 ஆதிதிராவிட அமைப்புகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டது ஒரு வியத்தகு நிகழ்வு. சிதம்பரம் தாலுக்கா மகாஜன சங்கம் (1949), கறம்பக்குடி திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம் (1952), ஆதிதிராவிட முன்னேற்றக் கழகம் (1953), மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆதிதிராவிட சங்கம் (1953), மாயவரம் தாலுக்கா தமிழர் ஒற்றுமை சங்கம் (1954), பட்டுக்கோட்டை ஒரத்தநாடு தாலுக்கா ஆதிதிராவிட முன்னேற்ற சங்கம் (1954), கோபாலபுரம் சமூக சீர்திருத்த சங்கம் (1958), கோவிலாங்குளம் ஆதித்தமிழர் சமூக முன்னேற்ற சங்கம் (1959) ஆகியவை அவற்றுள் அடங்கும். அவ்வளவு குறுகிய காலத்தில் அத்தனை அமைப்புகள் உருவானதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை. கம்யூனிஸ்ட் நடவடிக்கைகள் வேறு பெயர்களில் மறைவாக நடக்காமல் கட்டுப்படுத்த அனைத்து அமைப்புகளையும் கட்டாயமாகப் பதிவு செய்யுமாறு காலனித்துவ அரசாங்கம் உத்தரவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஓர் ஊகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் 1965-இல் ஒரு சுதந்திர நாடாக மாறியபின் சாதி தொடர்பான மக்களின் மனப்பாங்கிலும் நடைமுறைகளிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அரசாங்கத்தின் பொதுக் குடியிருப்புப் பேட்டை வீடுகளில் சாதிக்கு இடமில்லை. சமுதாய நடைமுறைகளும் தகுதிக்கு முன்னுரிமை அளிப்பதாக மாற்றமடைந்தன. பொருளாதார முன்னேற்றம் சாதி வேறுபாடின்றி அனைவரையும் சென்றடைந்தது. விளைவாக, 1970-களின் நடுப்பகுதியில், பெரும்பாலான ஆதிதிராவிட அமைப்புகள் அவற்றின் நோக்கம் பிற வழிகளில் நிறைவேறியதை உணர்ந்தன. அதைத் தொடர்ந்து அவை பூர்விக கிராமங்களில் உள்ள தங்கள் சமூகத்தின் மேம்பாட்டுக்கு நிதி திரட்டும் அமைப்புகளாக மாறின, அல்லது செயற்படாத அமைப்புகளாக ஆயின. சில அமைப்புகள் சாதி அடிப்படையிலான செயற்பாடுகளைக் கைவிட்டுத் தமிழ்மொழிக்கான அமைப்புகளாக உருமாறின. எடுத்துக்காட்டாக, கறம்பக்குடி திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம் பழைய அடையாளத்தைத் துண்டிக்கும் வகையில் கிராமப் பெயரை நீக்கித் திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்று பெயரை மாற்றத் தீர்மானம் நிறைவேற்றியது. முடிதிருத்துவோர் சங்கம் (1963-1973) முதலிய சில சங்கங்கள் முற்றாகச் செயலிழந்தன அல்லது தாமே முன்வந்து அடையாளங்களை மாற்றிக்கொண்டன.
மறுபுறம், பிராமணர்களுக்கான சிங்கப்பூர் தென்னிந்திய பிராமணர் சபை (1924), கொங்கு வேளாளக் கவுண்டர்களுக்கான சிங்கை நாமக்கல் சங்கம் (1948), கோனார்கள் எனப்படும் இடையர்களுக்கான யாதவர் சங்கம் (1953), நாட்டுக்கோட்டைச் செட்டியார்களுக்கான நகரத்தார் சங்கம் சிங்கப்பூர் (2003), கள்ளர் சாதியினருக்கான ‘கைண்ட்ஸ்’ குடும்பம் (2011), கலப்பத்துக்காரர்களுக்கான பொய்கை நற்பணி மன்றம் (2014) முதலிய சாதி அடிப்படையிலான அமைப்புகள் முன்பே உருவாகியோ புதிதாகத் தொடங்கப்பட்டோ செயற்பட்டுவருகின்றன. ஆதிதிராவிடர்களையும் இதர ‘தாழ்த்தப்பட்ட’ சாதிகளையும் போலன்றிப் பொதுவாகப் பிற சாதிகளைச் சேர்ந்தோர் தம் சாதி அடையாளத்தை விட்டுவிடத் தயங்குவதாகத் தோன்றுகிறது.
மொத்தத்தில், 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து சிங்கப்பூரில் சாதி வேறுபாடுகள் குறைந்துவிட்டன. சிங்கப்பூரில், 1970-களில் நடத்தப்பட்ட சமூகவியல் ஆய்வுகளில், தம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் சாதியைக் காட்டிலும் பொருளாதார, தொழில்நிலைத் தகுதிகளே மிகவும் முக்கியமென்று கருதப்பட்டதைப் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். இன்று, சிங்கப்பூரில் சாதி என்பது பண்பாட்டு நடைமுறைகளையும் தெய்வ வழிபாட்டுக்கான தெரிவுகளையும் உள்ளடக்கும் குடும்பப் பாரம்பரியமாகவே பெருமளவு நீடிக்கிறது.
இருப்பினும், உலகமயமாக்கமும் உள்ளூர்ப் பண்பாட்டுத் தேய்மானங்களும் ஏற்படுத்தும் அச்சத்தின் விளைவாகத் தமிழ்ச் சமூகத்தில் சாதியைக் காப்பாற்றும் ஆர்வம் அண்மையில் அதிகரித்திருப்பதாகச் சிலர் அவதானித்துள்ளனர். இந்தியாவிலிருந்து, 2000-ஆம் ஆண்டுக்குப்பின், பெருமளவிலான இந்தியர் வருகைக்குப்பிறகு சாதி சார்ந்த நடைமுறைகள் சிங்கப்பூரில் எழுச்சி கண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பிள்ளைகள் பருவமடைவதை முன்னிட்டு நிகழும் சடங்குகள், திருமணத்திற்கு முன்னும் பின்னுமான சடங்குகள், குலதெய்வச் சிறப்பு வழிபாடுகள் போன்ற சாதி வழக்கங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. சாதி என்பது பாரபட்சமும் அநீதியும் மிகுந்த, பிறப்பின் அடிப்படையில் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் அமைப்பு என்ற நிலையிலிருந்து விடுபட்டு, இனக்குழு அடையாளத்தை மட்டுமே முன்வைக்கும் அமைப்பாக நீடிக்கமுடியும் எனச் சிலர் கருதுகின்றனர். ஆயினும், காலமாற்றங்களுக்கும் வெவ்வேறு சமூகச் சூழல்களுக்கும் ஏற்ப தகவமைத்துக்கொண்டு தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை சாதிக்கட்டமைப்புக்கு உண்டு என்பதால் சிங்கப்பூரில் சாதி புத்தெழுச்சி பெறுவது குறித்த கவலைகளும் எழுந்துள்ளன.
மேல்விவரங்களுக்கு:
Mani, A. The Changing Caste-Structure Amongst the Singapore Indians. Master’s thesis, Department of Sociology, University of Singapore, 1977. Unpublished.
Solomon, John. A Subaltern History of the Indian Diaspora in Singapore: The Gradual Disappearance of Untouchability 1872–1965. London and New York: Routledge, 2016.
Sinha, Vineeta. “Sojourning with Muṉīsvaraṉ the ‘Railway God.’” In Temple Tracks: Labour, Piety and Railway Construction in Asia, 1st ed., vol. 16, 199–236. New York: Berghahn Books, 2023. https://doi.org/10.2307/jj.9891561.12
Sinha, Vineeta. “Unraveling ‘Singaporean Hinduism’: Seeing the Pluralism Within.” International Journal of Hindu Studies 14, no. 2/3 (December 2010): 253–279.
Koh, Jaime. “Tamil Community,” Singapore Infopedia. Accessed 11 June 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=7cf8b115-d8bd-492a-825b-8aa47235dadd
Koh, Jaime. “Chettiars,” Singapore Infopedia. Accessed 11 June 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=013561b0-95db-445e-b5f4-1aac8b04fdf1
Murthy, Vidya. “Singapore Indians, a brief note.” IIAS Newsletter 49, Autumn 2008, 22-23. https://www.iias.asia/sites/iias/files/nwl_article/2019-05/IIAS_NL49_2223.pdf
“Once Upon a Time in Little India,” RootsSG, Accessed 11 June 2025. https://www.roots.gov.sg/en/stories-landing/stories/Once-Upon-a-Time-in-Little-India
Chandralekha. “Casteism in Singapore,” The Lipstick Laddoo Lekha Blog, 19 December 2020. https://lipstickladdoolekhablog.wordpress.com/2020/12/19/casteism-in-singapore/
Ashvin Parameswaran, and Rodney Sebastian. “Who Is a Brahmin in Singapore?” Modern Asian Studies 41, no. 2 (2007): 253–86. http://www.jstor.org/stable/4132352
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.