சிங்கப்பூரில் 1940-இல் தொடங்கப்பட்ட யாதவர் சங்கம், தமிழ் பேசும் யாதவ சமூகத்தினரின் அமைப்பு. சங்க உறுப்பினர்களின் கல்வி, கலாசார, ஆன்மீக அக்கறைகளை ஊக்குவிப்பதோடு, இன, சமய வேறுபாடின்றிச் சிங்கப்பூர்வாசிகள் பலனடையும் நலத்திட்டங்களையும் மேற்கொள்கிறது.
யாதவர் சங்கம், என்.ஏ. தாமோதரன் பிள்ளை, சச்சிதானந்தன், சகஸ்ரநாமம் ஆகியோர் உள்ளிட்ட ஒத்த எண்ணம் கொண்ட ஒரு சிறிய குழுவினரால், காளிமுத்து சுவாமியார் பெரியசாமி தலைமையில் நிறுவப்பட்டது. இரண்டாம் உலகப் போர் மூண்டதாலும் அதைத்தொடர்ந்து ஜப்பானியர் ஆக்கிரமிப்புக்கு சிங்கப்பூர் ஆட்பட்டதாலும் 1940-களில் பெரும்பாலும் சங்கம் செயல்படவில்லை. போருக்குப்பிறகு, 1950-களின் முற்பகுதியில், அப்பர் சிராங்கூன் ரோட்டில் ஒரு நிலத்தை வாங்கியதோடு, சங்கம் 1953-இல் முறைப்படிப் பதிவு செய்யப்பட்டது. சங்கத்தில், 1970-களின் நடுப்பகுதிவாக்கில், சுமார் 100 உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், அடுத்த சில பத்தாண்டுகளில், உறுப்பினர்கள் பலர் ஓய்வு பெற்றதாலும் இந்தியாவுக்குத் திரும்பியதாலும் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தது.
இருப்பினும், யாதவ சமூகத்தின் இளைய தலைமுறையினர் தம் சமூக அடையாளத்தைப் பேணும் பொருட்டுச் சங்கத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். அதைத்தொடர்ந்து மீண்டும் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரமாக முன்னெடுத்ததோடு, 2019-இல் சங்கத்தின் நெறிமுறைகளையும் புதுப்பித்தனர். முன்பு வாங்கப்பட்ட நிலம் விற்கப்பட்டு, 412 சிராங்கூன் ரோட்டில் ஓரிடம் வாங்கப்பட்டு அதில் சங்கம் செயல்படத் தொடங்கியது. சங்கம், 2023-இல் அதன் 70-ஆவது ஆண்டு விழாவை அதன் முதல் பெண் தலைவர் சாரதா தேவி தலைமையில் கொண்டாடியது.
ஸ்ரீ ராம நவமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி போன்ற வருடாந்திர கோவில் நிகழ்வுகளுக்கு நிதியுதவி செய்வதோடு, யாதவர் சங்கம் அதன் உறுப்பினர்களுக்காக, குறிப்பாக இளையரைக் குறிவைத்து, பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது. புதிய யோசனைகளையும் திட்டங்களையும் இளையர்கள் கொணரக்கூடும் என்று நம்பும் சங்கம், அவர்கள்மீது சிறப்புக் கவனம் செலுத்துகிறது. மேலும், பரந்துபட்ட இந்தியச் சமூகத்தின் நலனுக்காகச் சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளைக்கு 10,000 வெள்ளி நிதியளித்துள்ளது.
மேல்விவரங்களுக்கு
Yathavar Association. Accessed 1 August 2025. https://www.sporeyathavar.org/
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |