பெரிய பள்ளி என அழைக்கப்படும் ஜாமிஆ சூலியா பள்ளிவாசல்1826-இல் சிங்கப்பூரில் சூலியாக்களால் கட்டப்பட்ட தொடக்கக்காலப் பள்ளிவாசல்களுள் ஒன்று. அன்றாடத் தொழுகைகளுக்கும்சமய போதனைகளுக்கும் மட்டுமின்றித் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசித்தீர்க்கும் மையமாகவும் இது செயல்பட்டது. இது 1827-இல் கட்டப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு மிக அருகிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வழிபாட்டுத் தலங்களும் சௌத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ளன. சீன இனத்தவர் மிகுதியாக வாழும் இப்பகுதியில் இவ்விரு தலங்களும் அமைந்துள்ளமை அக்காலத்தில் நிலவிய பண்பாட்டு நல்லிணக்கத்தைக் காட்டுகிறது.
சூலியாக்களால் நிறுவப்பட்டாலும்பள்ளிவாசலின் நிர்வாகம் காலவோட்டத்தில் பலமுறை கைமாறித் தற்போது சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றத்தின்கீழ் உள்ளது. இங்குள்ள வசதிமிக்க இஸ்லாமிய அறக்கட்டளைகளில் ஒன்றான ஜாமிஆ சூலியாஅறக்கட்டளை பள்ளிவாசலுக்கு ஆதரவளிக்கிறது. சிங்கப்பூரில் தமிழில் சமய வகுப்புகள் நடைபெறும் சில பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்று.
பள்ளிவாசல், சிங்கப்பூரின் பயிற்சி பெற்ற முதல் கட்டடக் கலைஞரான ஜார்ஜ் ட்ரம்கூல் கோல்மன் என்பவரால், 4809 சதுர மீட்டர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. ஐரிஷ்காரரான அவர், தமிழ்நாட்டு மினார்களின் சாயலில், இந்திய-இஸ்லாமியத் தாக்கங்களைத் திறமையாகக் கலந்துஅவருடைய முத்திரைப் பாணியான நியோ-கிளாஸிகல் முறையில்வடிவமைத்தார். பள்ளிவாசலை ஒட்டிய தெருவுக்கு மாஸ்க் ஸ்ட்ரீட் என்று பெயரிடப்பட்டது. ஜாமிஆ சூலியா பள்ளிவாசலின் பண்பாட்டு, கட்டடக்கலை, வரலாற்று முக்கியத்துவங்களை அங்கீகரிக்கும் வகையில், 1974-இல், பள்ளிவாசல் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.
பள்ளிவாசல் சுமார் மூன்று மில்லியன் வெள்ளி செலவில் மறுசீரமைப்புச் செய்யப்பட்டு, புதிய வகுப்பறைகள், தொழுகைக்குக் குளிரூட்டப்பட்ட வசதிகள், சமூக ஒன்றுகூடலுக்கான இடம் உள்ளிட்ட வசதிகளுடன், 2024-இல் புதுப்பொலிவு பெற்றது. அப்போது நடந்த விழாவில், ஜாமிஆ சூலியா மரபுடைமை என்னும் புதிய திட்டமும் தொடங்கிவைக்கப்பட்டது. பள்ளிவாசலுக்குப் பின்னாலுள்ள நிலத்தில் அமையவுள்ள மரபுடைமைத் திட்டம் சூலியா சமூகத்தினரின் முயற்சிகளை நினைவுகூரும் விதமாக அமையும் என்றும் 2026-இல் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேல்விவரங்களுக்கு
Wikipedia Contributors. “Masjid Jamae,” Wikipedia. Accessed August 1, 2025. https://en.wikipedia.org/wiki/Masjid_Jamae
“Jamae Chulia,” Majlis Ugama Islam Singapore. Accessed August 1, 2025. https://www.muis.gov.sg/community/mosque/mosque-directory/jamae-chulia
“Welcome to Masjid Jamae (Chulia),” Masjid Jamae (Chulia) Singapore. Accessed August 1, 2025. https://masjidjamaechulia.sg
Thulaja, Naidu Ratnala. “Mosque Street.” Singapore Infopedia. National Library Board Singapore. Accessed August 1, 2025. https://www.nlb.gov.sg/main/article-detail?cmsuuid=103d344c-cb93-4e79-a6df-25d8c098f39b
Shafeeq, Syarafana. “196-year-old Jamae Chulia Mosque in Chinatown to get $3m restoration from end-2022,” The Straits Times (Singapore), October 09, 2022. https://www.straitstimes.com/singapore/196-year-old-jamae-chulia-mosque-to-get-3m-restoration-from-end-2022
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |