தொழிற்சங்கவாதியும் அரசியல்வாதியுமான முகமது காசிம் அப்துல் ஜப்பார் (1933 - 2010) ராடின் மாஸ் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக 1981 முதல் 1984 வரை பணியாற்றியவர். நாடாளுமன்ற விவாதங்களில் தம் பதவிக்காலம் முழுவதும் தமிழிலேயே பேசியவர்.
இந்தியாவின் நாகூரில் பிறந்த ஜப்பார், அங்கு உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து, சிங்கப்பூருக்கு 1950-இல் குடிபெயர்ந்தார். கெப்பல் கப்பல்பட்டறையில் உதவியாளராக 1952 வாக்கில் சேர்ந்தார். ஒருபக்கம் தொடர்ந்து வேலையில் முன்னேறிக்கொண்டே தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். தமிழர் பிரதிநிதித்துவ சபையிலும் சேர்ந்து செயல்பட்டார். கெப்பல் கப்பல்பட்டறை தொழிலாளர் சங்கம் 1968-இல் நிறுவப்பட்டபோது ஜப்பார் அதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில் தலைவராக ஆகி 1988 வரை அப்பதவியில் நீடித்தார். தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் மத்தியக் குழு உறுப்பினராகவும் 1979 முதல் 1985 வரை பணியாற்றினார்.
ஜப்பார் 1980-இல் மக்கள் செயல் கட்சியின் (ம.செ.க.) உறுப்பினரானார். அவ்வாண்டு நடந்த பொதுத்தேர்தலில் ராடின் மாஸ் தொகுதியில் வெற்றி பெற்றார். நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக ஈடுபட்ட ஜப்பார், தெலுக் பிளாங்கா வேயில் அல்-அமீன் மஸ்ஜித் கட்டுவது, தைப்பூச விழாவில் இசைக்கருவிகள் வாசிப்பது போன்ற இந்தியச் சமூகத்தின் பல்வேறு அக்கறைகளைக் குறித்துப் பேசினார். ஒரு விவாதத்தின்போது, “தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு” என்ற திருக்குறளை அவர் 18 பிப்ரவரி 1981 அன்று குறிப்பிட்டதே சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் ஒலித்த முதல் திருக்குறளாகக் கருதப்படுகிறது.
ஜப்பாரின் உடல்நல நலிவு, ஆங்கிலம் பேசும் வேட்பாளர்களுக்கு ம.செ.க. முன்னுரிமை அளித்தது ஆகிய காரணங்களால் அவர் 1984 பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை. அவரது நாடாளுமன்றப் பதவிக்காலத்திற்குப் பிறகு, ஜப்பார் 1990 முதல் 2003 வரை ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார். அவரது பங்களிப்புகளைப் பாராட்டி, 2002-இல் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் அவருக்கு முதுபெரும் தொழிலாளர் விருதை வழங்கியது. ஜப்பார் சிறுநீரகச் செயலிழப்பால் 2010-இல் காலமானார்.
மேல்விவரங்களுக்கு
“Indian Muslims Ready to Back Both Sinda and Mendaki,” The Straits Times, 21 July 1991, 18. (From Newspaper SG)
Parliament of Singapore, Obituary Speeches, vol. 44 of Parliamentary Debates: Official Report, 19 October 1984
“Radin Mas MP Quitting to Make Way for New Candidates,” The Straits Times, 25 August 1984, 11. (From Newspaper SG)
“9 Indian Muslim Groups Form Own Federation,” The Straits Times, 22 April 1992, 19. (From Newspaper SG)
To read in English
முகப்புப் பக்கத்திற்குச் செல்ல
கலைக்களஞ்சியத்தைப் பற்றி
The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.
The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.
| BETA |