சுப்பய்யா, அ.சி.



சிங்கப்பூர்த் தமிழர் கலைக்களஞ்சியம்

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

அ.சி. சுப்பய்யா என்று பரவலாக அறியப்படும் அண்ணாமலை சிதம்பரம் சுப்பையா (1881-1955), சமூக சீர்திருத்தவாதி, மருந்தாளுநர், மொழியியலாளர், எழுத்தாளர், தொழில்முனைவர், கொடையாளர் எனப் பன்முகம் கொண்டவர். தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் தலைவராக சுமார் 20 ஆண்டு பணியாற்றியவர். தமிழ் வரிவடிவ மாற்றங்களுக்குக் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியவர். சிங்கப்பூரில் பிறந்த சுப்பய்யா நான்காம் வகுப்பு வரை உள்ளூரில் படித்தார். பிறகு 1894-இல் தமது பெற்றோருடன் இந்தியாவுக்குச் சென்றார். அங்கு சிற்பம், ஓவியம், சோதிடம், மருந்தியல் உள்ளிட்டப் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொண்டார். புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் சதானந்த சுவாமியின் வழிகாட்டுதலில் மூலிகை மருத்துவப் பயிற்சி பெற்றார். சிங்கப்பூருக்கு 1902-இல் திரும்பியதும், மாட்டு வண்டி ஓட்டுதல் முதல் சிற்பம் வடித்தல் வரை பல்வேறு வேலைகளில் ஈடுபட்டார். இந்தக் காலக்கட்டத்தில் அவர் சிங்கை அகம்படியர் மகாசன சங்கம் என்ற தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து 1923-இல் அச்சங்கத்தின் தலைவர் பதவிக்கு உயர்ந்தார். பிறகு, 1928-இல், 233 சிராங்கூன் ரோடு என்ற முகவரியில் காந்தரசம் கம்பெனி (சித்த வைத்திய மருந்துசாலை) என்ற மருந்தகத்தை நிறுவினார். காந்தரசம் என அவர் பெயரிட்ட மருத்துவ குணமிக்கத் தைலத்தை இன்றைய கோடாலித் தைலத்திற்கு இணையாகக் கருதலாம். காந்தரசத்தின் வணிக வெற்றியால் பெரும் பொருளீட்டிய சுப்பய்யா காலப்போக்கில் பல சொத்துக்களை வாங்கினார். 

தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதியான ஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சுப்பய்யா, பெண்கள் சமத்துவ மேம்பாடு, சாதிப் பாகுபாடு ஒழிப்பு உள்ளிட்ட பல சமூகச் சீர்திருத்தங்களை சிங்கப்பூரில் செயல்படுத்த முயன்றார். தமிழர்கள் மத்தியில் கள் குடித்தல் பரவலாக இருந்த காலக்கட்டத்தில், அவர் தனது வாழ்நாள் முழுவதும் கள்ளுண்ணாமல் முன்மாதிரியாக நடந்துகாட்டினார். சமூகச் சீர்திருத்தங்கள் மட்டுமின்றி ஏழைத் தமிழர்களின் நலனில் அக்கறை செலுத்தினார். எடுத்துக்காட்டாக, 1933-இல், அடகுக்கடை உரிமையாளர்களின் ஏமாற்று நடைமுறைகளைத் தடுக்க, சீன மொழியோடு ஆங்கிலமும் அடகுக் கடை ரசீதுகளில் இடம்பெற உத்தரவிடுமாறு அவர் காலனித்துவ அதிகாரிகளிடம் மனு சமர்ப்பித்தார். அதைத்தொடர்ந்து, 1935-இல், அடகுக்கடை ரசீதுகளில் கட்டாய ஆங்கிலம் நடைமுறைக்கு வந்தது.

தற்போது சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழாகத் திகழும் தமிழ் முரசை 1935-இலும் சீர்திருத்தம் என்ற மாத இதழை 1939-இலும் தமிழர் சீர்திருத்தச் சங்கம் தொடங்கியபோது, சங்கத்தின் தலைவரான சுப்பய்யா கோ. சாரங்கபாணியுடனும் மற்ற சங்க உறுப்பினர்களோடும் இணைந்து முக்கிய பங்காற்றினார். பின்னர் சாரங்கபாணி அவ்விதழ்களை விலைக்கு வாங்கிக் கொண்டார். சுப்பய்யா, தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி (1935), சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் (1948) உள்ளிட்ட சில நூல்களை எழுதியுள்ளார். தனது ஆயுர்வேத குருவின் நினைவாக "சதானந்தன்" என்ற புனைபெயரில் பல கட்டுரைகளையும் எழுதினார். அவரது தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி, 13 தமிழ் எழுத்துக்களின் நவீனமயமாக்கலை வலியுறுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு. பெரியார் 1930-இல் சிங்கப்பூர் வந்தபோது சுப்பய்யா அவரிடம் தமது ஆராய்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். பின்னர் பெரியார் அந்த 13 எழுத்துகளையும் தமிழ்நாட்டில் பிரபலப்படுத்தினார். தமிழ்நாட்டு அரசாங்கம் 1978-இல் சீரமைக்கப்பட்ட எழுத்துகளை ஏற்றது. சிங்கப்பூரின் கல்வி அமைச்சு, 26 செப்டம்பர் 1983 அன்று, அதிகாரபூர்வமாக அம்மாற்றத்தை ஏற்றதைத்தொடர்ந்து 1984-இல் பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சுப்பய்யா 1934-இல் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று இறக்கும் வரை அப்பொறுப்பில் இருந்தார். அவர் இறப்பதற்கு முன், 125 சிராங்கூன் ரோட்டில் இருந்த சங்கத்தின் கட்டடத்தைப் புதுப்பிக்க 10,000 வெள்ளி நன்கொடை வழங்கினார். அவர் மறைந்தபிறகு, முன்பு அளித்திருந்த உறுதியின்படி, மேலும் 9,000 வெள்ளி அவரது குடும்பத்தாரிடமிருந்து பெறப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட சங்கக் கட்டடம் 1956-இல் திறக்கப்பட்டபோது, அவரையும் அவரது மனைவியையும் நினைவுகூரும் வண்ணம் அஞ்சலை- சுப்பய்யா மண்டபம் என்று சங்க மண்டபத்திற்குப் பெயரிடப்பட்டது. சுப்பய்யா, மறைவுக்குப்பின், மலாயாப் பெரியார் அல்லது சிங்கப்பூர்ப் பெரியார் என்று குறிப்பிடப்படுகிறார்.

சுப்பய்யா ஒரு தனி மனிதராகவும் ஒரு தலைவராகவும் தமிழ்ச் சமூகத்திலும் தமிழ் மொழியிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். சாரங்கபாணியின் வழியாக அவரது பங்களிப்பு தொடர்ந்தது. சிங்கப்பூர் வரலாற்றுக்கும் தமிழுக்கும் சுப்பய்யாவின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், 1989-இல் தேசிய மரபுடைமைக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மரபுடைமை வேட்டை திட்டத்தில் அவரது தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி நூல் முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

 


 

மேல்விவரங்களுக்கு
Kirupanantha Kumar S/o Palaiyan. A Biography of A. C. Suppiah. Singapore: National University of Singapore - Department of History, 1998. Unpublished bachelor’s thesis 

To read in English

முகப்புப் பக்கத்திற்குச் செல்ல

கலைக்களஞ்சியத்தைப் பற்றி

The information in this article is valid as of August 2025 and correct as far as we are able to ascertain from our sources. It is not intended to be an exhaustive or complete history of the subject. If you have any feedback on this article, please submit here.

 

 





Loading...

You May Also Like

You are currently on:

{{selectedTopic.label}}

Loading...

{{displayedDesc}} See {{ readMoreText }}


Loading...

Rights Statement

The information on this page and any images that appear here may be used for private research and study purposes only. They may not be copied, altered or amended in any way without first gaining the permission of the copyright holder.

Beta BETA